புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

மதுரை காவல்துறையின் இரட்டை விசாரணை முறை!

28 மார்ச், 2011

வரலாற்றுச் சிறப்பு மிக்க மதுரை மாநகரில் மதக்கலவரம் ஏற்படக்கூடிய இரு நிகழ்வுகள் கடந்த மூன்று மாதத்திற்குள் நடைபெற்றுள்ளன. இது குறித்த உண்மைகளை அறிய மனித உரிமை ஆர்வலர்கள் அடங்கிய கீழ்கண்ட உண்மை அறியும் குழு உருவாக்கப்பட்டது.


குழு உறுப்பினர்கள்:

அ. மார்க்ஸ், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் (PUHR) சென்னை,
கோ. சுகுமாரன், மக்கள் உரிமைக்கூட்டமைப்பு, (PUHR) புதுச்சேரி,
வழக்கறிஞர் ரஜினி, (PUHR), மதுரை
மு.சிவகுரு நாதன் (PUHR), திருவாரூர்
வழக்கறிஞர் மு.அப்பாஸ், மனித உரிமை அமப்புகளின் தேசிய கூட்டமைப்பு (NCHRO)
கு.பழனிச்சாமி (PUHR), மதுரை
மூத்த வழக்கறிஞர் ஜஹாங்கீர் பாதுஷா (NCHRO), மதுரை

இக்குழு 22.03.2011 முழுவது காஜிமார் தெரு பெரிய பள்ளிவாசல். மஹபூப் பாளையம் பள்ளிவாசல், எஸ்.எஸ். காலனியிலுள்ள ஆர்.எஸ்.எஸ் அலுவலகம், ஆரப்பாளையம் தண்ணீர் தொட்டிக்கு எதிரிலுள்ள வைகை ஆற்றுப்பகுதி முதலான இடங்களுக்கு நேரில் சென்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மண்டல அமைப்பாளர் சேதுராமன், மதுரை ஐக்கிய ஜமாத் தலைவர் நஜீமுதீன், ஐக்கிய ஜமாத் செயலாளர் அப்துல் காதர், மாநகர அரசு ஹாஜி. ஹாஜா மொய்னுதீன், மஹபூப்பாளையம் பள்ளிவாசல் தலைவர் முஹம்மது கவுஸ் மற்றும் தற்போது கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையிலுள்ள 5 கைதிகள் மற்றும் போலிசாரால் விசாரிக்கப்பட்ட பரக்கத்துல் அன்சார், ராஜா மைதீன், பாஷா ஆகியோரையும் காவல்துறையின் முன்னால் மாநகர ஆணையர் பாரி, துணை ஆணையர் செந்தில் குமார் ஆகியோரையும் நேரிலும், தொலைபேசியிலும் தொடர்பு கொண்டு உரிய தகவல்களை இக்குழு சேசரித்துக் கொண்டது. எங்களுக்குக் கிடைத்த தகவல்களின் ஊடாக நாங்கள் அறிந்தவற்றை கீழ்கண்டவாறு தொகுக்கலாம்.

சம்பவங்கள்:

1. காஜிமர் தெரு பெரிய பள்ளிவாசல் இழிவு செய்யப்படுதல்:
கடந்த டிசம்பர் 29(2010) அன்று காலையில் இப்பகுதி முஸ்லிம்கள் தொழுகைக்கு வரும்போது ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. ஒரு மூட்டையொன்று வாசலில் எறியப்பட்டிருந்ததைக் கண்ட அவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்து, காவல்துறையினர் அதை கைப்பற்றிச் சென்றுள்ளனர். கோழிக்கழிவுகள் அடங்கிய மூட்டையென அதுகுறித்து முஸ்லிம்களிடம் சொல்லி அமைதியாக இருக்கும்படி அவர்கள் காவல்துறையால் வற்புறுத்தப்பட்டனர். முஸ்லிம்கள் அமைதியாக‌ இருந்ததைத் தொடர்ந்து ஜனவரி 1, 2011 அன்று பள்ளிவாசல் சுவரில் மனித மலத்தைப் பூசி உள்ளுக்குள்ளும் மலம் விசிரியடிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி முஸ்லிம்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவுடன் கிருஷ்ணன் என்கிற துப்புறவுத் தொழிலாளியே இதற்குக் காரணம் எனச் சொல்லி போஸ் என்பவர் மீது வழக்கு தொடர்ந்தது. தொடர்ந்து பள்ளிவாசல் அருகே இரு காவலர்கள் காவலுக்கு நிறுத்தப்பட்டனர்.

2. எஸ்.எஸ் காலணி ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் மாட்டுத்தலை வீசுதல்:
மார்ச்1, 2011 அன்று அதிகாலை 4 மணியளவில் ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் ஒரு மூட்டையில் மாட்டுத்தலையொன்று சுருட்டிக் கிடந்ததைக் கண்ட அவர்கள் ஆத்திரமுற்று பத்திரிக்கையாளர்களைக் கூட்டு பிரச்சனையாக்கியுள்ளனர். இதை அறிந்த காவல்துறையினர் அங்கு சென்று அதை ஊர்வலமாக எடுத்துச் செல்ல முயன்ற ஆர்.எஸ்.எஸ் காரர்களைத் தடுத்து வழக்கொன்றையும் பதிவு செய்தனர். ஆர்.எஸ்.எஸ் பொறுப்பாளர் அசோகன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இ.பி.கோ 153(A), 505(1)(C) ஆகிய பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து வைகை ஸ்பெசல் டீம் என்கிற பெயரில் உதவி ஆய்வாளர் பார்திபன், உதவி ஆய்வாளர் வெங்கட்ராமன், காவலர் சங்கரன் ஆகியோர் அடங்கிய ஒரு சிறப்புப் புலனாய்வுப்படை உருவாக்கப்பட்டு சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் செந்தில்குமாரி அவர்கள் பொறுப்பில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த புலனாய்வுப்படையினர் சென்ற 8ம் தேதி காலை 11 மணியளவில் சுப்ரமணியபுரத்தைச் சேர்ந்த பரக்கத்துல் அன்சார் என்கிற ஆட்டோ டிரைவரை எல்-ஸ் நகரில் வைத்துப் பிடித்துச் சென்றுள்ளனர். அவரை அண்ணாமலை தியேட்டருக்கு கொண்டு சென்று பாட்ஷா எங்கே என்று கேட்டு அடித்து சித்திரவதை செய்துள்ளனர். அவர் தெரியாது எனச் சொன்ன போது அவரை இழுத்துச் சென்று அரசரடி ஒயின் ஷாப்பில் சாராயம் வாங்கிக் கொடுத்து கட்டாயமாக குடிக்கச் செய்து பின்னர் பாஷாவின் நம்பரை டயல் செய்து கொடுத்து  பேசச் சொல்லி அவரை வரவழைத்துள்ளனர். பின்பு இருவரையும் அண்ணாமலை தியேட்டரிலும் வேனிலும் வைத்து அடித்து கண்ணைக் கட்டி பல இடங்களுக்கு இழுத்துச் சென்று அவர்கள் மூலம் ரபீக் ராஜா (த.பெ காதர் மைதீன்), அல்ஹாஜ் (த.பெ ரசூல்), ராஜா மைதீன் (த.பெ சம்சுதீன்), அப்பாஸ் (த.பெ நாகூர் மீரான்), ஷாயின்ஷா (த.பெ ஜான்பா), சாகுல் ஹமீது (த.பெ உமர்) ஆகியோரையும் ஒவ்வொருவராகக் கொண்டு வந்தனர். இந்த 8 பேரையும் கண்ணைக் கட்டியும் கடுமையாக அடித்தும் சிலரை ஒரு காலில் தொங்கவிட்டு, ஷூ அணிந்த கால்களால் மிதித்தும் ஆடைகளை கழற்றி புகைப்படம் எடுத்தும் பலவாறு துன்புறுத்தி 11.03.2011 வரை கடுமையாக சித்திரவதை செய்தனர்.

11.03.2011 அன்று மதியம் இவ்வாறு இவர்கள் சித்திரவதைக்குள்ளாக்கபடுவதைக் கேளிவிப்பட்ட முஸ்லிம் பொது மக்கள் மஹபூப்பாளையத்தில் ஒன்று திரண்டு ஆர்பாட்டம் செய்தனர். 10.03.2011 அன்று உள்துறைச் செயலாளருக்கு அவர்களின் பெற்றோர்கள் தந்திகளும் கொடுத்துள்ளனர். இதையொட்டி சென்ற 11ம் தேதி மாலை பரகத்துல் அன்சார், ராஜா மைதீன், பாட்ஷா, ஆகிய மூவரை மட்டும் விடுதலை செய்துவிட்டு மற்ற ஐவர் நீதிபதி வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளனர். சித்திரவதைகளின் விளைவாக உடல் நிலை மோசமாக இருந்ததையொட்டி அவர்களது உறவினர்களின் வற்புறுத்தலின் பேரில் அப்பாஸ் மற்றும் ஷாயின்ஷா ஆகியோர் மதுரை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு கடந்த 17.03.2011 வரை உள்நோயாளியாக சிகிச்சை எடுத்துள்ளனர்.

உறவினர்களின் செலவில் சி.டி.ஸ்கேன் முதலியவையும் எடுக்கப்பட்டுள்ளன. தற்போது சிறையிலுள்ளவர்களில் மூவர் ஷோசியல் டெமாக்ரடிக் கட்சி என்கிற (எஸ்.டி.பி.ஐ) அமைப்பின் பொறுப்பாளர்கள்.

எமது பார்வைகள்:
1. நடந்த இரு சம்பவங்களையும் இரு வேறு விதமாக காவல்துறையினர் கையாண்டுள்ளனர். பள்ளிவாசல் இழிவு செய்யப்பட்ட நிகழ்வில் உளவுத்துறை உதவி ஆணையர் குமாரவேலு உள்பட போலிஸ் அதிகாரிகள் வீசப்பட்ட மூட்டையில் இருந்தது பன்றிக் கறி என்பதையும் இது தொடர்பாக கைது செய்யப்பட்ட கிருஷ்ணன் என்கிற துப்புறவுத் தொழிலாளிக்கும் இச்சம்பவங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் ஐக்கிய ஜமாத்தார்களிடம் ஒத்துக்கொண்டுள்ளனர். நாங்கள் விசாரித்த அளவிலும் கூட இதுவே உண்மை என்பது உறுதியாகிறது. உரிய முறையில் விசாரிக்காமல் அப்பாவி ஒருவரை குற்றத்தை ஒத்துக்கொள்ளச் செய்து வழக்கை முடிவுக்குக் கொண்டு வந்தது இன்று ஊரறிந்த ரகசியமாக உள்ளது. ஒரு பெரிய மதக்கலவரத்தைத் தடுப்பதற்காக இவ்வாறு செய்ததாக இப்போது போலிஸ் தரப்பில் கூறப்படுகிறது.

2. ஆனால அதே நேரத்தில் ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் மாட்டுத்தலை கண்டெடுக்கப்பட்ட நிகழ்வு தீவிரப் புலன் விசாரணைக்கு உள்படுத்தப்பட்டு. சிறப்பு புலனாய்வுப் படை அமைக்கப்பட்டு 8 இளைஞர்கள் மூன்று நாட்கள் சட்ட வரோத காவலில் வைக்கப்பட்டு, கடும் சித்திரவதைகள் செய்து ஐவரிடம் ஒப்புதல் வாக்கும் மூலம் பெறப்பட்டு இன்று அவர்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பயன்படுத்தப்படும் என்கிற கருத்தும் உலவுகிறது.

3. ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் வீசப்பட்ட மூட்டையில் என்ன இருந்தது என்றே தமக்குத் தெரியாது எனவும் காவல்துறை சொன்ன பிறகே அது மாட்டுத்தலை எனத் தெரிந்து கொண்டதாகவும் ஆர்.எஸ்.எஸ் மண்டலப் பொறுப்பாளர் சேதுராமன் எம்மிடம் தொலைபேசியில் கூறினார். எனினும் அவர்கள் தரப்பில் அசோகன் என்பவரால் கொடுக்கப்பட்ட புகாரில் மாட்டிறைச்சி இருந்தது என குறிப்பிடப்பட்டுள்ளது. பள்ளிவாசல் இழிவு செய்யப்பட்ட வழக்கில் பன்றிக்கறியை கோழிக்கறி என முஸ்லிம்களிடம் சொன்ன காவல்துறையினர் இந்த வழக்கில் அவர்களே ஆர்.எஸ்.எஸ் அமைப்பிடம் பையில் இருந்தது மாட்டுத்தலையென சொன்னதாக சேதுராமன் கூற்றிலிருந்து தெரிய வருகிறது. இது உண்மையாயின் இதுவும் காவல்துறையின் இரட்டை அணுகல் முறையைக் காட்டுகிறது. இன்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஐவரும் தாமே இக்குற்றத்தைச் செய்துள்ளதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததாக காவல்துறையினர் கூறுகின்றனர். வீடியோ பதிவையும் செய்துள்ளனர். பிப்ரவரி 28, 2011 இரவு ஆரப்பாளையம் மேல் நிலை தண்ணீர் தொட்டிக்கு எதிராக வைகை ஆற்றுக்குள் அப்பகுதியில் சுற்றித்திறிந்து கொண்டிருந்த ஒரு கன்றைப் பிடித்துச் சென்று ஆற்றுக்குள் வைத்த்டு தலையை வெட்டிச் சுத்தம் செய்து பாலித்தீன் உரையில் வைத்து இரண்டு மோட்டார் சைக்கிளில் சென்று ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் தூக்கியெறிந்ததாக அவ்வாக்கு மூலத்தில் சொல்லப்படுகிறது. மீதியுள்ள உடற்பாகங்களை ஓடும் நீரில் எறிந்து அழித்துள்ளதாகவும் அவ்வாக்குமூலத்தில் உள்ளது. எனினும் தாங்கள் அந்தக்குற்றத்தைச் செய்யவே இல்லை எனவும் தங்களை சித்திரவதை செய்து சிறப்புப் புலனாய்வுப்படையினர் இவ்வாக்குமூலத்தைப் பெற்றுள்ளனர் எனவும் நாங்கள் சந்தித்த 5 பேர்களும் எங்களிடம் வலியுறுத்திக் கூறினர். வீடியோ பதிவில் கன்றின் சில பாகங்கள் இவர்களால் எரிக்கப்பட்டதாகவும் காட்டப்பட்டுள்ளது.

4. அருகிலுள்ள தென்காசியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மதக்கலவரத்தைத் தூண்டும் நோக்குடன் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் தம்முடைய அலுவலகத்திற்கு தாமே குண்டு வைத்துக் கொண்டதை தமிழகக் காவல்துறையினர் சிறப்பாக புலனாய்வு செய்து வெளிப்படுத்தினர். இன்று ஐதராபாத், மாலேகான், கோவா, முதலான பல இடங்களில் ஆர்.எஸ்.எஸ் காரர்கள் இத்தகைய வன்முறைச் செயல்களில் ஈடுபட்டு பலர் சிறையிலுள்ளனர். மதுரையில் நடைபெற்ற இந்த இரு நிகழ்வுகளும் இதே போல் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரே கூட செய்திருக்க இடமுண்டும்.இந்த நோக்கிலிருந்தும் கூட இந்த வழக்கு விசாரிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் தற்போது அமைக்கப்பட்டிருக்கிற சிறப்புப் புலனாய்வுப்படை இத்தகைய வாய்ப்பை பரிசீலனைக்கு கூட எடுத்துக் கொள்ளாமல் இதனை எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் தான் செய்திருக்க வேண்டும் என்ற ஒரே கோணத்தில் மட்டும் விசாரித்துள்ளனர். ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் மாட்டுத்தலை வீசிய வழக்கில் காவல்துறையால் பிடித்துச் செல்லப்பட்ட நாள்வர் முன்பு ராணி என்கிற ஒரு பெண்ணை பாலியல் தொழில் செய்ததாகக் குற்றம்சாட்டி கடத்திச் சென்று துன்புறுத்திய வழக்கொன்றில் ஈடுபட்டவர்கள் என்பதாலும் இவர்கள் முன்னதாக அக்கட்சியில் இருந்ததாலும் இத்தகைய நோக்கில் விசாரிக்கப்பட்டதாக காவல்துறையால் சொல்லப்படுகிறது. இது ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இல்லை. அவர்கள் முந்தைய குற்றத்திற்கு தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்பதில் கருத்து மாறுபாடு இல்லை. ஆனால் அதற்காவே அடுத்தடுத்த குற்றங்களையும் அவர்களே செய்திருப்பார்கள் என்ற கோணத்தில் விசாரிப்பதும் பிற‌ சாத்தியங்களை ஒதுக்குவதும் சரியாகாது.

5. பொதுவாக ஏதேனும் ஒரு முஸ்லிம் அமைப்பினர் ஒரு குற்றச் செயலில் ஈடுபடும் பொழுது முஸ்லிம் சமூகம் ஒட்டுமொத்தமாக அவர்கள் பின் நிற்பதில்லை. பாலியல் தொழில் செய்த பெண்ணை கடத்தியதாக சொல்லப்படும் வழக்கிலும் கூட கைது செய்யப்பட்டவர்கள் சார்பாக ஜமாத்தார்கள் யாரும் பேசவில்லை. ஆனால் இன்று மதுரையிலுள்ள 90 பள்ளிவாசலைச் சேர்ந்த ஐக்கிய ஜமாத்தார்களும் 15 முஸ்லிம் அமைப்புகளும் இப்பொழுது போடப்பட்டுள்ள வழக்கு பொய்யானது எனக்கருந்துகின்றனர்.  இதைக்கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு உள்பட பல போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். பொய் வழக்கு என்பதற்கு ஆதாரமாக போலிசாரால் முன் வைக்கப்படும் ஒப்புதல் வாக்குமூலங்களிலுள்ள சொஅ முரண்களைச் சுட்டிக் காட்டுகின்றனர். எடுத்துக்காட்டாக மதுரை விலங்கு நோய் நுண்ணறிவுப் பிரிவு வீசியெறியப்பட்ட மாட்டுத்தலையை ஆய்வு செய்து தந்துள்ள‌ அறிக்கையில் அது ஒரு கன்றின் தலை எனவும் அந்தத் தலையின் தோலும், மூளையும் நீக்கப்பட்ட பின்னரே ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் வீசப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மாட்டுத்தலையை வீச வேண்டுமென நினைக்கிறவர்கள் இவ்வளவும் செய்த பிறகுதான் அந்தத் தலையை வீச வேண்டுமா? என்கிற கேள்வி முஸ்லிம் தரப்பில் எழுப்பப்படுகிறது. பொதுவாக மாட்டு இறைச்சி விற்கும் கடைகளில்தான் இவ்வாறு தலையைச் சுத்தம் செய்து மூளையை நீக்கி விற்பார்கள். ஆனால் போலிஸ் தரப்பில் சொல்லப்படுகிற கருத்து, மேய்ந்து கொண்டிருந்த கன்று ஒன்றை இன்று சிறையிலுள்ளோர் பிடித்து தலையை வெட்டி ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் எறிந்தனர் என்பதும் ஆர்.எஸ்.எஸ் காரர்களை ஆத்திரம் கொள்ளச் செய்ய வேண்டுமென இதைச் செய்கிறவர்கள் இப்படித் தலையைச் சுத்தம் செய்து மூளை மற்றும் தோலை நீக்கி வீசியெறிய வேண்டியதில்லை.

6. இது குறித்து நாங்கள் மாநகரத் துணை ஆணையர் செந்தில்குமாரியிடம் விசார்த்த போது கன்றுக்குட்டியின் தலையை யாரோ மாட்டிறைச்சிக் கடையிலிருந்து விலைக்கு வாங்கி வந்து வீசினர் என்ற எண்ணம் ஏற்படுவதற்காக அவ்வாறு செய்துள்ளனர் என்றார். ஆனால் இன்று சிறையிலுள்ளோர் அளித்துள்ளதாக போலிஸ் தரப்பில் அளிக்கப்படும் ஒப்புதல் வாக்குமூலத்தில் "கன்றுக் குட்டி தலையை விலைக்கு வாங்கினால் தெரிந்துவிடும் என நினைத்தே" உயிருடன் திருந்த ஒரு கன்றுக் குட்டியைப் பிடித்து வெட்டியதாகக் கூறப்பட்டுள்ளது. எனவே விலைக்கு வாங்கியதாக எண்ணம் ஏற்படக்கூடாது என்பதே ஒப்புதல் வாக்குமூலம் அளித்தவர்களின் கருத்து எனத் தெரிகிறது. இது மாநகர துணை ஆணையரின் கூற்றுக்கு எதிராக உள்ளது. தவிரவும் தலை தவிர்த்து கன்றின் உடல்பாகங்களை எரித்த சாம்பல் எனக் காவல்துறையால் காட்டப்படும் வீடியோ படத்தில் ஒரு கொத்து விலங்கு முடி உள்ளதையும் ஜமாத்தார்கள் குறிப்பிட்டனர். முடி எப்படி எரியாமல் இருந்திருக்கும்? தவிரவும் அம்முடி கன்றுக்குரியதல்ல எனவும் ஆட்டு மயிர் என்றும் அவர்கள் கூறுகின்றனர். தவிரவும் வெட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட கத்தி மீன் வெட்டும் கத்தி என்பதால் அதை வைத்து இவ்வளவும் சுத்தமாக தலையை வெட்டியிருக்க முடியுமா என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது. எஞ்சிய உடற்பாகங்களை வைகையாற்றுக்குள் சிற்றோடையில் அவர்கள் வீசியெறிந்ததாகக் காவல்துறையால் சொல்லப்படுகிறது. அதைத் தேடுவதற்கான முயற்சிகளும் செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. நாங்கள் சிறையில் சென்று சந்தித்த போது அங்கிருந்த குற்றஞ்சாட்டப்பட்டோர்களும் தாம் இதைச் செய்யவே இல்லையென உறுதியாக மறுத்தனர். 7. மதுரை முன்னாள் மாநகரக் காவல் ஆணையர் பாரி அவர்களிடம் நாங்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது தான் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுவிட்டதால் அதிகாரப்பூர்வமாக எதுவும் கூற முடியாது எனவும் இருந்த போதிலும் முழுக்க முழுக்க நேர்மையாக இவ்விசாரணை மேற்கொள்ளப்பட்டது எனவும் சிறையில் இருக்கும் ஐவர்தான் இதைச் செய்தார்கள் எனவும் உறுதி படக்கூறினார். மாநகரத் துணை ஆணையர் செந்தில் குமாரி அவர்கள் எங்களிடம் பேசும் போது தாம் இந்தப் பதவிக்கு வந்தவுடன் கொடுக்கப்பட்ட இப்பொறுப்பைச் செவ்வனே நிறைவேற்றுவதற்கு எடுத்துக்கொண்ட முயற்சிகளை மிக விரிவாக விளக்கிக் கூறினார். பள்ளிவாசல் இழிவு செய்யப்பட்ட வழக்கின் போது தான் இந்தப் பொறுப்பில் இல்லை எனவும், தற்போது ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் இழிவு செய்யப்பட்ட வழக்கை மிக நேர்மையாக விசாரித்துள்ளதாகவும் இந்த ஐவரே அதைச் செய்தார்கள் எனவும் உறுதிபடக் கூறினார். பெண் கடத்தப்பட்ட வழக்கில் காவல்துறையினர் கடுமையாக நடந்து கொண்டதன் எதிர்வினையாகவே அவர்கள் இதைச் செய்துள்ளனர் எனவும் கூறினார்.

7. எஸ்.டி.பி.ஐ அமைப்புடன் தொடர்பு கொண்ட மனித நீதிப் பாசறை என்ற பெயரில் முன்னர் செயல்பட்டு வந்த ஒரு அமைப்பைச் சேர்ந்த கோவை இளைஞர்கள் நால்வர் மீது அன்று கோவை மா நகரநுண்ணறிவுப் பிரிவு துணை ஆணையராக இருந்த ரத்தின சபாபதி என்பவர் வெடிகுண்டு வைத்ததாக பொய் வழக்கு ஒன்றைத் தொடுத்தார். பின்னர் சி.பி.சி.ஐ.டி விசாரணையில் அது பொய் வழக்கென உறுதி செய்யப்பட்டது. பாலன் என்கிற நேர்மையான காவல்துறை கண்காணிப்பாளர் இந்த விசாரணையைச் செய்தார். எனினும் இன்றளவும் குற்றவாளி ரத்தின சபாபதி தண்டிக்கப்படவில்லை. மாறாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. அதே போல இதுவும் ஒரு பொய் வழக்காக இருக்கலாம் என்கிற கருத்து முஸ்லிம் மக்களிடம் பரவலாக உள்ளது.

மேற்கண்ட பார்வைகளின் அடிப்படையில் அரசின் முன்பு நாங்கள் வைக்கும் பரிந்துரைகள்


1. நமது நாட்டை இன்று மிகப்பெரிய அளவில் அச்சுறுத்திக் கொண்டிருக்கக் கூடிய ஆபத்து மத அடிப்படையிலான பயங்கரவாதமும், மதக்கலவரங்களுந்தான். எனவே இந்தப் பிரச்சனைகளில் அரசும் காவல்துறையும் மிக நேர்மையுடனும் நடு நிலையுடனும் செயல்படுவது அவசியம். மதுரையில் நடைபெற்றுள்ள இவ்விரு சம்பவங்களிலும் காவல்துறையினர் இருவேறு விதமாகச் செயல்பட்டுள்ளது சமூக ஒற்றுமையில் அக்கறையுள்ள‌ எல்லோருக்கும் மிகுந்த கவலையளிக்கிறது. மதக்கலவரத்தைத் தடுப்பதற்காகவே பள்ளிவாசல் இழிவு செய்யப்பட்டதை முறையாக விசாரிக்கவில்லை எனவும் அப்பாவி ஒருவர் மீது குற்றத்தைச் சுமத்தி வழக்கை முடித்ததாகவும் காவல்துறையே சொல்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இம்மாதிரியான நிகழ்வுகளில் குற்றம் செய்தவர்கள் யாராயினும் அவர்கள் உரிய முறையில் தண்டிக்கப்படுவதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதும் மட்டுமே சமூக ஒற்றுமைக்கு வழிவகுக்கும். மாறாக‌ பாதிக்கப்படுவது முஸ்லிம் என்றால் வழக்கை ஊற்றி மூடுவதும் இந்துக்கள் என்றால் முஸ்லிம்களைத் தேடி வேட்டையாடுவதும் சட்டவிரோதக் காவலில் அடைத்து வைத்து சித்ரவதை செய்வதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. பள்ளிவாசல் இழிவு செய்யப்பட்ட வழக்கு மறு விசாரணை செய்யப்பட வேண்டும். அப்பாவி கிருஷ்ணன் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டு அவருக்கு உரிய இழப்பீடு வழங்க்கப்பட வேண்டும். இந்த வழக்கை இவ்வாறு ஊற்றி மூடிய காவல்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2. ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் மாட்டுத்தலை வீசப்பட்ட வழக்கு குறித்து ஒட்டுமொத்தமாக முஸ்லிம்கள் மனதில் இது பொய் வழக்கு என்ற கருத்து உள்ளது. ஒட்டுமொத்தமாக சிறுபான்மையினர் மத்தியில் காவல்துறை மற்றும் அரசு மீது இவ்வாறு ஏற்படும் நம்பிக்கைக் குறைவு கவலைக்குரியது. எனவே இவ்வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி பிரிவிற்கு மாற்றப்பட வேண்டுமென இக்குழு கருதுகிறது.

3. மார்ச் 8 முதல் மார்ச் 11 முடிய 8 முஸ்லிம் இளைஞர்கள் சட்டவிரோதக் காவலில் வைக்கப்பட்டு கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். சித்ரவதைத் தடைச்சட்டம் ஒன்று உருவாகிக் கொண்டுள்ள பின்னனியில் மதுரை மாநகர காவல்துறை மேற்கொண்ட இந்த நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது. இதற்குக் காரணமான அதிகாரிகள் மீது விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பாதிக்கப்பட்டோருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இத்தகைய மதக்கலவரம் ஏற்படக் கூடிய செயல்கள் நிகழ்ந்திருந்தும் மதுரையில் வாழும் இரு மதங்களையும் சேர்ந்த பொது மக்கள் அமைதி காத்ததையும் வன்முறையில் ஈடுபடாததையும் இக்குழு மனமாரப் பாராட்டுகிறது

இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

0 விமர்சனங்கள்:

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010