இன்று உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது அரை இறுதி ஆட்டம் மொகாலியில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே நடைபெற உள்ளது.
பத்தாவது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் தொடங்கியது. இந்தப் போட்டியை இந்தியா, வங்காள தேசம் மற்றும் இலங்கை ஆகிய மூன்று நாடுகளும் சேர்ந்து நடத்தி வருகிறது. இந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. தொடர்ந்து 3 முறை உலகக்கோப்பைய வென்ற ஆஸ்திரேலிய இந்த முறை கால் இறுதியோடு மூட்டை கட்டியது. இந்த உலகக்கோப்பை போட்டியில் ஆசிய அணிகளே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. நேற்றைய நடந்த முதலாவது அரை இறுதிப்போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேரியுள்ளது. இன்று நடக்க இருக்கும் இறுதிப்போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகிறது. இதில் என்ன விஷயம் இருக்கிறது என்று நினைக்கிறீர்களா? இருக்கிறது இதில் யார் வெற்றிபெறப்போகிறார்கள் என்ற விஷயத்திற்கு வரவில்லை மாறாக இன்றைய ஊடகங்களும், பத்திரிக்கைகளும் இதை எவ்வாறு பயன்படுத்திக்கொண்டு லாபம் சம்பாதிக்கிறார்கள் என்பது தான் நாம் பார்க்க போகும் சிறு தகவல்.
என்று இந்தியாவும் பாகிஸ்தானும் அரை இறுதியில் விளையாடப்போகிறது என்று முடிவானதோ அன்றிலிருந்தே மீடியாக்கள் விஷ வார்த்தைகளை பரவ வைத்தார்கள். இதில் இந்தியப் பிரதமர் பாகிஸ்தான் பிரதமரை கிரிக்கெட் பார்க்க அழைத்ததும் சும்மா சவச்ச வாய்க்கு அவல் கிடைத்தது போன்று எல்லா ஆங்கில் செய்தி தொலைகாட்சியிலும் விவாதம் சூடு பிடிக்க ஆரம்பித்தது. இப்படி செய்வதால் இந்த கிரிக்கெட் போட்டியை காணும் ரசிகர்கள் இது ஒரு சாதாரண விளையாட்டுப் போட்டிதான் என்பதை மறந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் ஏதோ போர்தான் நடக்கப்போகிறது என்பது போல தங்களது எல்லா அலுவல வேலைகளையும் கிடப்பில் போட்டு விட்டு டி.வி முன்பு அமர்கிறார்கள்.
இதற்கு முழுக்க முழுக்க காரணம் மீடியாக்களும், பத்திரிக்கைகளும்தான் என்பதில் மாற்றுக் கருத்து இருக்கவே முடியாது. காரணம் எந்த பத்திரிக்கையை எடுத்துப்பார்தாலும் தலைபில் இந்த போட்டி வாழ்வா? சாவா? என்றும், இந்திய அணி பாகிஸ்தான் அணியை பழி தீர்க்குமா? என்பதைப் போன்ற சூடேற்றும் வார்த்தைகளை கொண்டு தான் கட்டுரை எழுதுகின்றனர். (என்னமோ இந்த போட்டியில் இந்திய அணி தோற்றுவிட்டால் அத்தோடு வீரர்கள் அனைவரையும் இந்திய அரசு தூக்கில் போடக் காத்திருக்கிறது என்பது போல!)
எத்தனையோ நாடுகள் பிற நாட்டுடன் போர் தொடுத்து இருக்கின்றது. அதே அணிகள் விளையாட்டில் மோதி உள்ளார்கள். ஆனால் அவர்களில் யாரும் இதைப்போன்ற ஒரு பரப்பரப்பை ஏற்படுத்தியதே இல்லை. உதாரணத்திற்கு இரண்டாம் உலகப்போரை எடுத்துக்கொள்வோம், அதில் பரம் எதிரியாக இருந்தது பிரான்ஸும் ஜெர்மனியும். இந்த நாடுகளுக்கிடையே நடந்த போர் பற்றி வரலாற்றை படித்தவர்கள் அவ்வளவு எளிதில் மறந்து விட மாட்டார்கள். உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நடக்கும் சமயம் இவ்விரு அணிகளும் பல தடவை மோதியுள்ளது. அதுவெல்லாம் வெறும் விளையாட்டாகவே பார்க்கப்பட்டதே ஒழிய இரு நாடுகளுக்கும் இடையே நடக்கும் போர் என்பதை போன்ற பரபரப்பு ஏற்பட்டதில்லை.
ஆனால் இந்தியா பாகிஸ்தான் போட்டி என்று வந்துவிட்டால் போதும் பத்திரிக்கையாளர்களுக்கு கொண்டாட்டம் தான். இரு நாடுகளுக்கு இடையே பிரச்சனை இருந்தால் அதை விளையாட்டு போட்டியின் மூலம் நிவர்த்தி செய்யும் நாடுகளுக்கு மத்தியில் விளையாட்டுப்போட்டியின் மூலமாகவே விஷப்பிரச்சாரத்தை நமது நாட்டு மீடியாக்கள் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போன்று பாகிஸ்தான் அரசின் ஒரு அறிவிப்பையும் இங்கே நாம் சுட்டிக்காட்டவேண்டும். தனது நாட்டில் எவ்வளவோ தீர்க்க வேண்டிய பிரச்சனைகள் இருக்கிறது. தினம் தினம் குண்டுவெடிப்புகள், பசி, பட்டினி, வெள்ளத்தால் எத்தனையோ மக்கள் வீடை இழந்து, அநாதையாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் பாகிஸ்தான் பிரதமரி அறிவிப்போ எரிச்சலை ஏற்படுத்துகிறது. அது என்னவென்றால் இன்று நடக்கவிருக்கும் அரை இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணி இந்திய அணியை வீழ்த்திவிட்டால் ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் தலா 25 ஏக்கர் நிலம் வழங்க்கப்படுமாம? ஏன் அத்துனை வீரர்களின் வீடுகளும் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் அடித்துச்செல்லப்பட்டுவிட்டதா? என்ன கொடுமை?
விளையாட்டில் வெற்றி பெற வேண்டும் என்பது அவர்கள் மீது கடமை. வெற்றி பெற ஊக்குவிப்பதற்காகத்தான் இந்த அறிவிப்புகள் என்றால் இதே போன்ற அறிவிப்புகள் மற்ற விளையாட்டுப்போட்டிக்கும் இருக்கவேண்டும். ஆக மொத்தத்தில் பத்திரிக்கைகள் குறிப்பிடுவது போன்று பரபரப்பு ஏற்படப்போகிறது. அதை பார்த்து எத்துனை இதய நோயாளிகள் மரணிக்கப்போகிறார்களோ? பொறுத்து இருந்து பார்ப்போம்!
கட்டுரை: முத்து
0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக