எமிரேட்ஸ் இந்தியா ஃப்ரேட்டர்னிட்டி ஃபோரம் (EIFF) ஏற்பாடு செய்திருந்த "ஆரோக்கியமான இஸ்லாமிய குடும்பம்" என்ற குடும்ப நிகழ்ச்சி 22.04.11 வெள்ளியன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. ஷார்ஜாவிலுள்ள ரையான் ஸ்டார் இண்டர்நேஷனல் ஸ்கூலில் நடைபெற்ற இந்த இனிய மாலை நிகழ்ச்சியில் சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பங்குபெற்று பயனடைந்தனர்.முன்னதாக,திருமறை வசனங்களை ஓதி சகோ.அப்துல் கஃபூர் அவர்கள் நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். பின்னர் சகோ.அப்துல் ஹமீது அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். EIFFன் பணிகள் குறித்த அறிமுகவுரையை அதன் பொருளாளர் சகோ. அஷ்ரஃப் அலீ அவர்கள் நிகழ்த்தினார்.
அமீரகத்தில் EIFF செய்து வரும் பல்வேறு சமூகநலப் பணிகளைப் பற்றி அவர் எடுத்துரைத்தார். துபாய் முனிசிபாலிட்டியுடன் இணைந்து கடற்கரைகளைச் சுத்தப்படுத்துதல்,லேபர் கேம்ப்களில் மருத்துவ விழிப்புணர்வு முகாம்களை நடத்துதல்,லேபர்களுக்கு இலவச மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ளுதல், உடலும் உள்ளமும் புண்பட்டு மருத்துவமனைகளில் அடைந்து கிடக்கும் நோயாளிகளைச் சந்தித்து பூக்களையும், பழங்களையும் அன்பளிப்பாக அளித்து ஆறுதல் கூறுதல், அமீரகத்தில் ஆதரவற்று நிற்கும் இந்தியர்களுக்கு உரிய உதவிகளைச் செய்தல் போன்ற பல்வேறு பணிகளை EIFF செய்து வருவதாக அவர் தனது உரையில் குறிப்பிட்டார். தூக்குக் கயிற்றின் நிழலில் சிறையிலிருக்கும் ஓர் அப்பாவி முஸ்லிம் தமிழ்ச் சகோதரரை விடுதலை செய்யும் முயற்சியில் EIFF இப்பொழுது ஈடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதன்பின் "இஸ்லாமியப் பார்வையில் நல்லதொரு குடும்பம்" என்ற தலைப்பில் சகோ. செய்யது அலீ அவர்கள் சிறப்புரையாற்றினார். ஆரோக்கியமான குடும்பம் எவ்வாறு இருக்கவேண்டும் என்று பல எடுத்துக்காட்டுகளுடன் கூறிய அவர், இஸ்லாம் சுத்தத்திற்கும், சுகாதாரத்திற்கும் எவ்வளவு முக்கியத்துவம் தருகிறது என்பதை விவரித்துக் கூறினார். இன்று இஸ்லாமிய ஒளி வீசாததால் மேலைநாட்டுக் குடும்பங்கள் எப்படி சின்னாபின்னமாகச் சிதறி சீரழிந்து கிடக்கின்றன என்பதைப் பல ஆதாரங்களுடன் அழகுற விளக்கினார்.
பின்னர் "மார்பகப் புற்றுநோய்" என்ற தலைப்பில் துபாய் பிரைம் மெடிக்கல் சென்டரில் மகப்பேறு மருத்துவ நிபுணராகப் பணியாற்றும் டாக்டர் ராணி நடராஜன் MD அவர்கள் சிறப்புரையாற்றினார். சிறிது நேரமே உரையாற்றினாலும் உரை முழுவதும் தகவல்களாகத் தந்து அசத்தினார். மார்பகப் புற்று நோய் குறித்த நல்லதொரு விழிப்புணர்வை பெண்களிடம் அவர் ஏற்படுத்தினார்.
நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக "ஆரோக்கியமான வாழ்வுக்கு அருமையான செய்திகள்" என்ற தலைப்பில் துபாய் ராஷித் மருத்துவமனையில் ஃபிஸியோதெரபிஸ்டாகப் பணியாற்றும் டாக்டர் முஹம்மத் இஸ்மாயீல் அவர்கள் சிறப்புரையாற்றினார். தனது உரையின் மூலம் அனைவரையும் கட்டிப்போட்ட அவர் நவீன உலகில் நமது வாழ்க்கைப் பாணி (Life Style) முற்றிலும் மாறிவிட்டதையும், அதனால் இன்று பல நவீன நோய்கள் உருவாகி விட்டதையும் உணர்த்தினார்.
பெண்கள் தங்கள் இல்லங்களில் இருந்துகொண்டே ஆரோக்கியமான வாழ்க்கையை மேற்கொள்ளலாம் என்று குறிப்பிட்ட அவர், அதற்காக பல ‘டிப்ஸ்'களைத் தந்தார். தினமும் சில மணித்துளிகளாவது உடற்பயிற்சி செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், இன்று உலகில் பரவலாகக் காணப்படும் முதுகுவலி குறித்து தனது உரையில் விரிவாகக் குறிப்பிட்டார். முதுகுவலி வராமல் இருக்கவும், ஆரோக்கிமயான வாழ்க்கை வாழவும் எளிதான சில உடற்பயிற்சிகளை ஒரு சகோதரரை வைத்து செய்தும் காண்பித்தார்.
குழந்தைகளுக்குத் தனியாக திருக்குர்ஆன் ஓதுதல், ஓட்டப்பந்தயம் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற குழந்தைகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
STRATA நிறுவனத்தின் மனிதவளத்துறை மேலாளர் சகோ. MMS ஹாஜா அலாவுதீன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து நிகழ்ச்சியைச் சிறப்பித்தார். சிறப்புரையாற்றிய மருத்துவர்களுக்கும், தங்கள் கல்விக்கூடத்தில் நிகழ்ச்சி நடத்துவதற்கு மனமவந்து அனுமதியளித்த ரையான் ஸ்டார் இண்டர்நேஷனல் ஸ்கூலின் எக்ஸகியூட்டிவ் டைரக்டர் சகோ. கலந்தர் அவர்களுக்கும் சிறப்பு விருந்தினர் சகோ. ஹாஜா அலாவுதீன் அவர்கள் நினைவுப் பரிசினை வழங்கினார். போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கும் அவர் பரிசுகளை வழங்கினார்.
EIFF-ன் பொருளாளர் சகோ. அஷ்ரஃப் அலீ அவர்கள் சிறப்பு விருந்தினருக்கு நினைவுப் பரிசினை வழங்கினார்.

அனைவருக்கும் கருத்துப் படிவம் (Feedback Form) கொடுத்து நிகழ்ச்சி குறித்து அவர்களின் கருத்துகள் எழுதி வாங்கப்பட்டன. கலந்துகொண்ட அனைவரும் இந்த இனிய மாலை நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாக அகமகிழ்வுடன் கூறினர்.
EIFFன் தன்னார்வத் தொண்டர்கள் நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை வெகு விமரிசையாகச் செய்திருந்தனர். கலந்துகொண்ட ஆண்களுக்கு ஆண் தொண்டர்களும், பெண்களுக்கு பெண் தொண்டர்களும் ஓடி ஓடிச் சென்று உதவிகள் புரிந்தனர்.
சிறப்பு விருந்தினர் சகோ. MMS ஹாஜா அலாவுதீன் அவர்கள் தொண்டர்களின் அர்ப்பணிப்பை வெகுவாகப் பாராட்டினார். நிகழ்ச்சி முழுவதையும் சகோ. அப்துல் ஹமீது அவர்கள் தொகுத்து வழங்கினார்.






0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக