கடமையைச் செய்வோம்
இஸ்லாத்தின் அடிப்படை ஐந்து கடமைகளில் ஜகாத்தும் ஒன்று, அருள்மறை குர்ஆனில் அல்லாஹ் சுமார் 32 இடங்களில் இதனை வலியுறுத்துகின்றான்.
அவற்றில் ஒரு சில வசனங்கள்
இன்னும் தொழுகையை முழுமையாக கடைபிடித்தும், ஜகாத்தை கொடுத்தும் வாருங்கள் (அல் குர்ஆன் 2:110)
அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஜகாத்தாக எதை நீங்கள் கொடுக்கிறீர்களோ (அது அல்லாஹ்விடத்தில் பெருகும்). அவ்வாறு கொடுப்பவர்தான் (தன் நற்கூலியை) இரட்டிப்பாக்கி கொள்கிறார்கள். (அல் குர் ஆன் 30:39)
ஜகாத்தை கொடுத்துவருபவர்கள் வெற்றி அடைந்துவிட்டார்கள் (அல் குர் ஆன் 23:4)
ஜகாத் கடமையாவதற்கான நிபந்தனைகள்:
1. ஜகாத் கொடுக்கும் பொருளில் முழு சொத்துரிமை இருக்க வேண்டும்.
2. அத்தியாவசிய அனைத்து செலவீனங்கள் போக மேல் மிச்சமாக இருக்க வேண்டும்.
3. மேல் மிச்சமாக இருப்பது ஷரீஅத் விதித்துள்ள குறிப்பிட்ட அளவை அடைந்திருக்க வேண்டும்.
4. அது ஒரு வருடம் நம்மிடம் இருந்திருக்க வேண்டும்.
5. கடன் இருக்கக்கூடாது.
6. ஜகாத் கொடுக்கும் பொருள் விருத்தி அடையும் பொருளாக இருக்க வேண்டும்.
ஷரீஅத் விதிக்கும் ( நிஸாப்) குறிப்பிட்ட அளவு:
1. தங்கம் - 85 கிராம் இருந்தால் 2.5% ஜகாத்தாக கொடுக்க வேண்டும்.
2. வெள்ளி - 595 கிராம் இருந்தால் 2.5% ஜகாத்தாக கொடுக்க வேண்டும்.
3. பணம் - தங்கம் அல்லது வெள்ளியின் அளவை அடைந்தால் 2.5% ஜகாத் தரவேண்டும்.
விவசாய பொருட்கள். மீன்கள் 653 கிலோ இருந்தால் (தானாக உற்பத்தியானால் 10 சதவிகிதமும், நாம் உற்பத்தி செய்தால் 5 சதவிகிதமும்) ஜகாத் கடமையாகும். வாடகை கட்டிடங்கள், வாகனங்கல், தொழிற்சாலைகள் பணத்தின் அளவை அடைந்தால் (செலவினம் போக) 2.5% ஜகாத் கடமையாகும்.
ஜகாத் மேலே குறிப்பிட்டுள்ளபடி இஸ்லாத்தில் வலியுறுத்தப்பட்டிருக்கும் அது இன்னும் முறையாக மற்றும் முழுமையாக நிறைவேற்றப்படாததால் ஏழைகளில் நிலை கவலைக்கிடமாக இருக்கின்றது. இந்நிலையை மாற்றி சமூகத்தை வலிமையடையச் செய்ய முறையான வழிகளில் தெளிவான திட்டமிடுதலுடன் பல்வேறு கஷ்டங்களுக்கிடையில் பாடுபட்டுக் கொண்டிருக்கும் அமைப்புகளும் பொருளாதார பற்றாக்குறையினால் திணறிக்கொண்டிருக்கின்ற நிலை தொடர்கிறது.
இந்தியாவில் வறுமைக்கோட்டிற்கு கீழ் முஸ்லிம்கள் 31 சதவீதமாகவும், நகர்புறங்களிலும் 38.4 சதவீதமாகவும் உள்ளனர் என்ற கசப்பான உண்மை தான் நம் சமூகத்தின் இன்றைய நிலை, எனவே இறைவனுடைய கட்டளைகளை ஏற்று ஜகாத்தை கணக்கிட்டு வழங்குவதன் மூலம் முஸ்லிம் சமூகம் வலிமை பெறும்.
உலக அளவில் தங்கத்தை கொண்டே பொருளாதார நிலை கணக்கிடப்படுகிறது. எனினும் வெள்ளி கணக்கிட்டால் பெரும்பாலானோர் ஜகாத் தரும் நிலை உருவாகும். இதன் மூலம் சமூக அளவில் பெரிய மாற்றம் ஏற்படும்.
ஜகாத் வாங்குவதற்கு தகுதியானவர்கள்:
ஜகாத் என்னும் தருமங்களெல்லாம் வறியவர்களுக்கும், ஏழைகளுக்கும் அவற்றிற்காக (வசூல் செய்வது, கணக்கிடுவது, போன்ற துறைகளில்) உழைப்பவர்களுக்கும், எவர்கள் உடைய இதயங்கள் (இஸ்லாத்தின் பால்) ஈர்க்கப்படுகின்றனவே, அவர்களுக்கும் அடிமைகளை விடுதலை செய்வதற்கும், கடனாளிகளுக்கும் அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிபவர்களுக்கும்) வழிப்போக்கர்களுக்கும் உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும். அல்லாஹ் (யாவும்) அறிபவன் மிக்க ஞானமுடையவன். (அல்குர் ஆன் 9:60)
ஜகாத் கொடுக்காதவர்களின் நிலை:
இன்னும் எவர்கள் பொன்னையும், வெள்ளியையும், தங்கத்தையும் சேமித்து வைத்துக்கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடாமல் இருக்கிறார்களோ (நபியே) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு என்று நன்மாராயம் கூறுவீராக ( நபியே! அவர்களுக்கு நீர் அந்த நாளை நினைவூட்டுவீராக) அந்த நாளில் (அவர்கள் சேமித்து வைத்த செல்வத்தை) நரக நெருப்பிலிட்டுக் காய்ச்சி அதை கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும், விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும். இன்னும் இது தான் நீங்கள் உங்களுக்காக சேமித்து வைத்தது. ஆகவே நீங்கள் சேமித்து வைத்ததை சுவைத்து பாருங்கள்.(என்று கூறப்படும்) (அல்குர் ஆன் 9:34-35)
அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்: அல்லாஹ் யாருக்கேனும் செல்வத்தை அளித்து அதற்கான ஜகாத்தை அவர் செலுத்தவில்லையானால், அவரது செல்வம் கொடிய நஞ்சுடைய பாம்பாக அவருக்கு காட்சி தரும். அதற்கு (அதன் நெற்றியில்) இரு கறுப்பு புள்ளிகள் இருக்கும். மறுமை நாளில் அது அவரை (கழுத்தில் மாலையாக) சுற்றிக்கொள்ளும், பிறகு அந்த பாம்பு அவரது தாடையை பிடித்துக்கொண்டு நான் தான் உனது செல்வம். எனது கருவூலம் என்று சொல்லும் என நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு (3:180) இறைவசனத்தை ஓதினார்கள். ( நூல் புகாரி: 1430)
இஸ்லாத்தின் கடமையான ஜகாத்தை நிறைவேற்றி
இரட்டிப்பு கூலையையும் இறையன்பையும் பெறுவோம்!
இரட்டிப்பு கூலையையும் இறையன்பையும் பெறுவோம்!
0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக