புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

புதிய பார்வை: நவீன முஸ்லிம் மேதாவிகள்

18 மார்ச், 2011

முஸ்லிம்களில் சிலர் தங்களை "முஸ்லிம் மேதாவிகளாக" அடையாளப்படுத்துகின்றனர். இவர்கள் மற்றவர்களை பிற்போக்குவாதிகள் என்று கூறி தங்களை வித்யாசப்படுத்திக் காட்டுகின்றனர். ஆனால் உண்மையில் இவர்கள் முழுமையான முஸ்லிம்களும் அல்ல. முழுமையான மேதாவிகளும் அல்ல.


இத்தகைய முஸ்லிம் மேதாவிகள் முஸ்லிம் சமுதாயத்தில் சீர்திருத்தத்தை மேற்கொள்ளும் முக்கிய பங்காற்றலாம். அத்துடன் முஸ்லிம் சமுதாயம் மற்றும் பிற சமூக மக்களிடையே உள்ள இடைவெளியை நிவர்த்தி செய்யும் பாலமாக இவர்கள் செயல்படலாம். ஆனால் துரதிஷ்டவசமாக இவர்கள் பெருவாரியான முஸ்லிம்களிடமிருந்து விலகியே உள்ளனர். ஊடகங்களில் செயற்திட்டங்களை நிறைவேற்றவே இவர்கள் ஊடகங்களில் காட்சி தருகின்றனர். இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களைக் குறித்து செய்திகளை வெளியிடும் "வெகுஜன ஊடகங்கள்" தங்களின் கருத்துக்களை கேட்பதற்கு இத்தகைய முஸ்லிம்களையே நாடுகின்றனர். இஸ்லாத்தில் தாங்கள் பண்டிதம் பெற்றதாக காட்டிக்கொள்ளும் இவர்கள் நடைமுறையில் தாங்கள் இஸ்லாத்தை பின்பற்றுவதில்லை என்பதையும் பெருமையுடன் கூறிக்கொள்கின்றனர். இஸ்லாத்தை குறித்து தங்களுக்கு கருத்து தெரிவிக்க உரிமை உண்டு என்று கூறும் இவர்கள் இஸ்லாத்திற்காகவும் முஸ்லிம்களுக்காகவும் பரிந்து பேசுவது என்பது மிகக்குறைவு. இவர்கள் ஊடகங்களில் காட்சி தருவதே முஸ்லிம்களை குறித்து குறை கூறுவதற்குதான். இதன் மூலம் வெகுஜன ஊடகங்களுக்கு இவர்கள் மகத்தான ஒரு சேவையை செய்கின்றனர்.

"முத்தலாக்" (ஒரே சமயத்தில் மூன்று தலாக் சொல்வது) விஷயத்தை நாம் உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். முஸ்லிம் நாடுகள் பலவும் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையும் இது ஒரு பிரச்சனைக்குரிய விஷயம் என்பதையும் நாமறிவோம். இந்த மேதாவிகள் இதனை குறித்து பல மணி நேரங்கள் வாதம் புரிவதில் வல்லவர்கள். எப்பொழுதெல்லாம் தலாக் குறித்து ஃபத்வா வழங்கப்படுகிறதோ அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தாங்கள் கூறி வரும் அதே கருத்துக்களை மீண்டும் கூற ஆரம்பித்து விடுவர்.

ஜனவரி 2009 முதல் டிசம்பர் 2010 வரையுள்ள இரண்டு வருட காலத்தில் "விவாகரத்தும் முஸ்லிம்களும்" என்ற தலைப்பை கூகுளில் நாம் தேடினால் 1260 பதில்கள் நமக்கு கிடைக்கின்றன. அதே காலகட்டத்தில் "விவாகரத்தும் இந்துக்களும்" என்ற தலைப்பில் நாம் தேடினால் 261 பதில்கள் தான் கிடைக்கின்றன. இந்துக்களைவிட முஸ்லிம்கள் மத்தியில் ஐந்து மடங்கு விவாகரத்தும் அதிகமாக இருந்தால் அதனை நாம் ஏற்றுக்கொள்ளலாம். இத்தலைப்பிற்கு ஒரு முக்கியத்துவம் கொடுப்பதிலும் அர்த்தம் இருக்கிறது. ஆனால் முஸ்லிம்கள் குறித்த விவகாரத்தில் அதிகமான அளவு விவாதிக்கப்படுவதையே இது காட்டுகிறது. விவகாரத்து வழக்குகள் குறித்து முறையான தகவல்கள் இல்லாத போதும், தலாக்கின்மீது ஊடகங்கள் புரிந்து வரும் ஜிஹாதிற்கு இந்த மேதாவிகளும் துணை செல்கின்றனர்.

பெண்களுக்கெதிரான அத்துமீரல்கள், ஃபத்வாக்கள் குறித்த குற்றச்சாட்டுகள் ஆகியவை குறித்தே இந்த மேதாவிகள் அதிகமாக எழுதி வருகின்றனர். அத்துடன் இஸ்லாத்தை தவறான முறையில் மார்க்க அறிஞர்கள் விளக்கி வருவதாகவும் எழுதி வருகின்றனர். ஆனால் பெண்சிசுக்கொலை, வரதட்சணை கொடுமை, பெண்கல்வி ஆகியவை குறித்து இந்த மேதாவிகள் எழுதுவது மிகக் குறைவு. ஆனால் இவற்றை குறித்து உலமா பெருமக்கள் குரலெழுப்பி வருகின்றனர். "முஸ்லிம்களும் சிசுக்கொலையும்" என்ற தலைப்பில் நாம் தேடினால் (ஜனவரி 2009 முதல் டிசம்பர் 2010 வரை) வெறும் 13 பதில்கள்தான் கிடைக்கின்றன. ஆனால் இத்தகைய தலைப்புகள் குறித்து இந்த மேதாவிகளுக்கு எவ்வித அக்கறையும் இல்லை.

முத்தலக்கால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களை விட இத்தகைய விஷயங்கள்தான் முஸ்லிம்களை அதிகமாக பாதிக்கின்றன. இந்த விஷயத்தில் உலமாக்களை குறை சொல்ல முடியாதது அவர்களின் புறக்கணிப்பிற்கு காரணமாக இருக்கலாம்.

உலமா பெருமக்கள் சமுதாயத்தில் ஆழமாக வேரூன்றி இருப்பவர்கள். பெரும்பான்மையான முஸ்லிம்கள் இவர்கள் மீது மரியாதை வைத்துள்ளனர். அதே சமயம் விரல்விட்டு எண்ணக்கூடிய சிலர்தான் இத்தகைய மேதாவிகளை அங்கீகரிக்கின்றனர். இந்த மேதாவிகள் முஸ்லிம்களுடன் இரண்டறக்கலந்து வாழாததும் சமுதாயத்திற்கு எதுவும் செய்யாததும் தான் இதற்கு காரணம். தாங்கள் இஸ்லாத்தை பின்பற்றுவதில்லை என்று இவர்கள் கூறுவதும் முஸ்லிம்கள் இவர்களை ஏற்றுக்கொள்ளாததற்கு காரணமாக இருக்கிறது. இஸ்லாம் குறித்து விளக்கம் அளிக்கையில் உலமா பெருமக்களுடன் முரண்பாடு கொள்வதை தங்களின் கருத்துக்களை மக்கள் மீது திணிப்பதாக கூறும் இவர்கள், தாங்கள் கூறும் கருத்துக்களை திணிப்பது எவ்விதத்தில் நியாயம்? ஆக ஊடகங்களின் செயற்திட்டத்தை திறம் பட செய்யும் இந்த மேதாவிகளுக்கு முஸ்லிம் சமூகத்தில் எவ்வித மதிப்பும் இல்லை. ஊடகத்தால் பயன்படுத்தப்படும் சிலபுல்லுருவிகள்தான் இவர்கள்.

2 விமர்சனங்கள்:

Unknown சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு.

அந்த புல்லுருவிகள் யார் என்று தயவு செய்து தங்களுக்கு கோடிட்டுக் காட்ட முடியுமா ?


வஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு.

சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் சொன்னது…

அன்பு சகோரர் மஹ்மூது அவர்களுக்கு ஸலாம்!

இந்தக் கட்டுரை விடியல் வெள்ளி எனும் மாத இதழில் இருந்து எடுக்கப்பட்டது. தங்களுக்கு மேலும் இந்த கட்டுரை பற்றிய தகவல் அறிந்து கொள்ள சென்னை பெரியமேட், பேரக்ஸ் சாலையில் உள்ள விடியல் வெள்ளி அலுவலகத்தை அனுகவும்.

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010