அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகளின் கூட்டுப்படைகள் லிபியா மீது நடத்தி வரும் வான்வெளித்தாக்குதல்களை வன்மையாக கண்டிப்பதாக பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய தலைவர் இ.எம் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.
உள்நாட்டு பிரச்சனைக்கு வெளிநாட்டு சக்திகளை பயன்படுத்தி தீர்வு காண்பது என்பது அந்நாட்டின் இறையாண்மை மீது நடத்தப்படும் தாக்குதலாகும். லிபியாவில் ஏற்பட்டுள்ள ஒட்டுமொத்த எழுச்சியை லிபிய அதிபர் கலோனல் கடாபியின் இரும்புக்கரங்களிலிருந்து லிபியாவை விடுவித்து அரசியல் மறுமலர்ச்சி ஏற்படுத்த வேண்டும் என்பதேயாகும். மக்கள் எழுச்சியை அடக்குவதற்கு லிபியாவில் கடாபி கையாண்ட விதம் கண்டிக்கத்தக்கது, எதிர்க்கப்பட வேண்டியது இருப்பினும், இதனை ஒரு காரணியாக வைத்துக் கொண்டு லிபியா மீது அமெரிக்க கூட்டுப்படைகள் தாக்குதல் நடத்துவதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. பல நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிட்டு மிகவும் கீழ்த்தரமாக நடந்து கொண்ட வரலாறு அமெரிக்காவிற்கு நிறையவே உண்டு. இந்த தலையீடுகள் எல்லாம் அப்பாவி மக்களை பாதுகாக்கப் போகின்றேன் என்றபெயரில் நடத்தப்பட்டிருந்தாலும், உண்மையில் ஈராக், ஆஃப்கானிஸ்தான் போன்ற நாடுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் அந்நாடுகள் மீதான அமெரிக்காவின் ஆதிக்கத்தை வெளிகாட்டுவதற்காகவும், அந்நாடுகளின் வளங்களை சுரண்டுவதற்காகவும் நடத்தப்பட்டதாகும். லிபியாவின் மீது நடத்தப்பட்ட வான்வெளி தாக்குதல்களினால் அந்நாட்டில் நடந்து வந்த எழுச்சிக்கு பெருத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளதோடு மட்டுமல்லாமல் லிபியா போர் பகுதியாகவும் மாறியுள்ளது. இச்சூழல் மாற ஐக்கிய நாடுகளின் சபை உடனே தலையிட்டு லிபியா மீதான வான்வெளி தாக்குதல்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்றார். மேலும் ஐ. நா. சபை லிபியாவில் சண்டையிட்டு கொண்டிருக்கும் பல்வேறு குழுக்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமான தீர்வு காண்பதற்கு ஆக்கப்பூர்வமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இந்தியா லிபியாவுடன் சுமூகமான ராஜதந்திர உறவுகளை மேற்கொண்டு வருகிறது. அதோடு லிபியாவில் வெளி நாட்டுப் படைகளை இறக்குவதென்ற ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் கருத்துக்கு இந்தியா ஆதரவளிக்கவில்லை என்பதும் வரவேற்கத்தக்கதாகும். இது போன்ற இக்கட்டான் சூழலில் இந்தியா வெறும் பார்வையாளராக இல்லாமல் ராஜதந்திர ரீதியான உறவுகள் மூலம் பிரச்சனையை சுமூகமாக்குவதற்கு முயற்சிப்பதுடன் லிபியாவில் சண்டையிட்டு வரும் குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தற்போது லிபியாவின் அவசர தேவையான அமைதி ஏற்படவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய தலைவர் இ.எம். அப்துர் ரஹ்மான் இந்திய அரசை வலியுறுத்தினார்.
0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக