டாக்டர் பினாயக் சென்னிற்கு ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ள விமர்சனத்தின் அடிப்படையில் தேசத்துரோக சட்டத்தை திருத்தவேண்டும் என்ற கோரிக்கையை ஆதரிப்பதாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் தெரிவித்துள்ளார்.
தேசத் துரோகம் தொடர்பான இந்திய தண்டனைச் சட்டம் 124(எ) பிரிவை அரசியல் எதிரிகளுக்கும், மனித உரிமை-சமூக இயக்கங்களுக்கும் எதிராக மத்திய, மாநில அரசுகள் துஷ்பிரயோகம் செய்வதாக இ.எம்.அப்துற்றஹ்மான் குற்றஞ்சாட்டினார்.
ஒரு ஜனநாயக நாடு என்ற நிலையில் மாவோயிஸ்டுகளின் அனுதாபியாக இருப்பது தேசத்துரோகம் அல்ல என உச்சநீதிமன்றம் கூறிய கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 1922-ஆம் ஆண்டு பிரிட்டீஷார் தேசத்துரோக குற்றஞ்சாட்டி காந்திஜியிடம் விசாரணை நடத்தியபொழுது, இத்தகைய சட்டங்கள் குடிமக்களின் சுதந்திரத்தை அடக்கி ஒடுக்குவதாக உருவாக்கப்பட்டவை என காந்திஜி குற்றஞ்சாட்டியிருந்தார்.
சுதந்திரம் கிடைத்த பிறகும் இத்தகைய காலனியாதிக்க சட்டங்களை சுமந்து நடப்பது தேசத்திற்கு வெட்கக் கேடாகும். உச்சநீதிமன்ற தீர்ப்பின் பின்னணியில் தேசத்துரோக சட்டத்தை திருத்துவோம் என்ற மத்திய சட்ட அமைச்சரின் வாக்குறுதி நிதர்சனமாகும் என நம்புவதாக இ.எம்.அப்துற்றஹ்மான் தெரிவித்தார்.
தேசத்துரோக சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டு 121 தினங்கள் சிறையில் அடைக்கப்பட்ட பிறகே பினாயக் சென்னிற்கு ஜாமீன் கிடைத்துள்ளது. இவ்வழக்கில் உச்சநீதிமன்றம் தலையிடுவதற்கு முன்பு இரண்டு வருடங்களாக அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தேசத்துரோகம், சட்டவிரோத செயல்கள் உள்ளிட்ட குற்றங்கள் சுமத்தப்பட்டு பல வருடங்களாக சிறையில் வாடும் ஆயிரக்கணக்கானோரின் பிரதிநிதிதான் பினாயக் சென். இத்தகைய வழக்குகளில் நிரபராதிகள் என கண்டறிந்து விடுதலைச் செய்யப்படுபவர்களுக்கு இழப்பீடோ, அவர்களை பொய் வழக்குகளில் சிக்க வைப்பவர்களுக்கு தண்டனையோ அளிக்காமலிருப்பது முரண்பாடானதாகும். ஜாமீன் வழங்குவதுதான் சட்டமென்றும், சிறையிலடைப்பது அவமதிப்பாகும் என்ற உச்சநீதிமன்றம் முன்பு வழங்கியுள்ள தீர்ப்பை நீதிமன்றங்கள் புறக்கணித்து வருவது வழக்கமானதாகும்.
தேசத்துரோகம் தொடர்பான இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவை மட்டுமல்ல, தேசப்பாதுகாப்பு, சட்டவிரோத செயல்கள் தடுப்பின் பெயரால் அமுலில் இருக்கும் அனைத்து கறுப்புச் சட்டங்களையும் வாபஸ் பெறவேண்டும். இத்தகைய சட்டங்களைக் குறித்து மறுபரிசீலனை செய்ய சட்டக் கமிஷனை உடனடியாக நியமிக்க மத்திய அரசு தயாராக வேண்டும் என இ.எம்.அப்துற்றஹ்மான் தெரிவித்துள்ளார்.
0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக