சுதந்திர தினத்தன்று தமிழகத்தின் தென்மாவட்டமான நெல்லையின் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மேலப்பாளையத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தவிருந்த அணிவகுப்பு நிகழ்ச்சிக்கு தமிழக அரசின் காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
முந்தைய ஆட்சியின் போதும் கடந்த 3 ஆண்டுகளாக பொதுவான இடங்களில் சுதந்திர தின அணிவகுப்பு நடத்த தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து உள் அரங்கு மைதானங்களில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டு வந்தது. தமிழகத்தை ஆளும் அரசுகளின் இத்தகைய அராஜக போக்கு இந்திய அரசியல் சட்டம் உறுதி அளிக்கும் குடிமக்கள் உரிமைகள் குறித்து பல கேள்விகளை எழுப்புகிறது.
அணிவகுப்பை தடுப்பதற்கு தமிழக அரசின் காவல்துறை கையாண்டுவரும் நடவடிக்கைகளும், அதற்காக முன்வைக்கும் நியாயங்களையும் ஆராய்ந்தால் இதன் பின்னணியில் குறுகிய மனம் படைத்தோரின் விருப்பங்கள் வெளியாகும்.
ஒரு பொது தத்துவத்தின் அடிப்படையிலோ, சட்டம்-ஒழுங்கை பேணவேண்டும் என்ற அடிப்படையிலோ இத்தடை விதிக்கப்படவில்லை. முன்னரே தயார் செய்யப்பட்ட திரைக் கதையின் அடிப்படையிலேயே பாரபட்சமாகவும், ஜனநாயக விரோதமாகவும் கையாண்ட இந்த தடை நடவடிக்கைக்கு பின்னணியில் யாருடைய கரங்களோ விளையாடிக் கொண்டிருப்பது நிரூபணமாகிறது.
முதலாவதாக இந்நடவடிக்கை இந்திய அரசியல் சட்டத்தின் பிரிவு 21-ன்படி கருத்து சுதந்திரத்திற்கு எதிரானதாகும். அரசியல் சட்டம் அளிக்கும் அடிப்படை உரிமைகளுக்கான பாதுகாப்பை வெளிப்படையாக மீறும் செயலாகும்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா போராட்டங்கள், மாநாடுகள், தெருமுனைக் கூட்டங்கள், அணிவகுப்புகள், பேரணிகள் என பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திவருகிறது. இந்நிகழ்ச்சிகள் ஒன்றில்கூட பிற மதங்களுக்கு எதிரான கருத்துக்கள் பரப்புரைச் செய்யப்பட்டதில்லை. பொதுமக்களுக்கு சிறு இடையூறும் ஏற்பட்டதில்லை. மாறாக, பொதுமக்கள் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நற்பணிகளுக்கு ஆதரவு அளித்தே வருகின்றனர்.
இந்நிலையில் சுதந்திர தினத்தன்று நடத்தப்படும் அணிவகுப்பிற்கு மட்டும் தொடர்ந்து தடைவிதித்துவருவதன் அவசியம் என்ன? என்பதுதான் நடுநிலையாளர்களின் உள்ளத்தில் எழும் கேள்வியாகும்.
இந்தியாவில் வாழும் மத சிறுபான்மையினருக்கு மட்டுமின்றி இந்த தேசத்திற்கே ஆபத்தாக செயல்படும், இந்தியாவின் தேசத் தந்தையான மகாத்மா காந்தியடிகளையே கொலைச் செய்த கும்பல்தான் ஆர்.எஸ்.எஸ் என்ற ஹிந்துத்துவா பாசிச பயங்கரவாத இயக்கம். இந்த பாசிச விஷவிருட்சத்தின் தலைவர்கள் இந்த தேசத்தின் முன்னேற்றத்திலோ ஏன் இந்தியாவின் சுதந்திர போராட்டத்தில் கூட சிறிதளவு கூட பங்களிப்பை செய்யவில்லை என்பது வரலாறு கூறும் உண்மையாகும். இந்நிலையில் இவர்கள் எதிர்க்கின்றார்கள் என்ற ஒரே காரணத்திற்காக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் சுதந்திர தின அணிவகுப்பிற்கு தமிழக அரசு தடை விதிக்கும் என்றால் ஆர்.எஸ்.எஸ் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது நடத்திவரும் அரை ட்ரவுஸர் அணிவகுப்பிற்கும், நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்க தமிழக அரசு முன்வருமா?
முஸ்லிம்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் முழுமையான சக்திப்படுத்தலை லட்சியமாக கொண்டு செயல்படும் அமைப்புதான் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா. சமூகங்களை சக்திப்படுத்தும் முயற்சிகளுக்கு தூண்டுகோலாக பல்வேறு சமூக சேவைகளை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆற்றிவருகிறது. சமூக சேவைகள், கல்வி சேவைகள், மனித உரிமை தளத்தில் ஆற்றும் பணிகள் எல்லாம் இவற்றின் ஒருபகுதியாகும். அரசியல் வாழ்க்கையின் தேசிய நீரோட்டத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட அடித்தட்டு மக்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் விதத்தில் வழிகாட்டி, அரசியல் புனர்நிர்மாணத்திலும், சுய வலிமைப்படுத்துதலிலும் அவர்களுக்கு ஆதரவு அளித்தும் பணிகளை முன்னெடுத்துச் சென்றுக்கொண்டிருக்கிறது இவ்வியக்கம்.
சுதந்திர உணர்வும், சுய உணர்வும் கொண்ட ஒரு சமூகத்தால் மட்டுமே தன்னை வலிமைப்படுத்த இயலும் என்பதை பாப்புலர் ஃப்ரண்ட் கருதுகிறது. இத்தகையதொரு சுதந்திர உணர்வை உருவாக்கி அவர்களை தேசிய நீரோட்டத்தின்பால் கைப்பிடித்து அழைத்துவருவதன் மூலமே இதனை சாதிக்க முடியும். சொந்த உரிமைகளை குறித்தும், கடமைகளை குறித்தும் உணர்வுடைய ஒரு சமூகமாக ஒடுக்கப்பட்ட சமூக மக்களை மாற்றுவதற்கு அவர்களை தேசிய தினங்கள் மற்றும் சின்னங்களுடன் ஒன்றிணைக்க வேண்டியது அவசியமாகும்.
அறுபது ஆண்டுகளை கடந்து சுதந்திரத்தின் உற்சாகமான நிமிடங்களை உட்கொண்டு கடந்து செல்கிறது நமது நேசத்திற்குரிய தேசம். சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கான உரிமை கூட மறுக்கப்படும் ஒரு சமூகத்தின் மன வேதனைகளும், அது உயர்த்தும் ஏராளமான கேள்விகளும் நம்மை உற்றுநோக்கி தேசம் ஒரு ஆபத்தான கட்டத்தில் செல்வதை உணர்த்துகின்றன.
20 கோடி எண்ணிக்கையிலான இந்திய முஸ்லிம்களின் கண்ணீரும், குருதியும் கலந்த சோக கதைகள் இந்த நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்ததிலிருந்தே தொடரத்தான் செய்கிறது. பலரின் சொந்த விருப்பங்களுக்காக இந்த தேசம் துண்டாடப்பட்டபோது பிறந்த மண்ணிலேயே மரணிக்க விரும்பி இந்தியாவிலேயே தங்கிய முஸ்லிம்களுக்கு, பிரிவினையின் பழியையும், அது உருவாக்கிய தாழ்வு மனப்பாண்மையையும் பாரமாக பல தலைமுறைகள் சுமக்கவேண்டிய சூழல் ஏற்பட்டது.
1757 மற்றும் 1857-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சுதந்திர போராட்டங்களில் உயிரையும், பொருளையும் அர்ப்பணித்து பிரிட்டீஷ் சாம்ராஜ்ஜியத்துடன் போராடியவர்களின் வாரிசுகள் பொதுவாழ்க்கையின் விளிம்புகளில் ஓரங்கட்டப்பட்டு சொந்த தாய்நாட்டில் அந்நியரைப்போல வாழவேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டனர்.
அறிவும், ஆற்றலும் மிக்க தலைவர்கள் இல்லாததும், சமூகத்தின் ஒடுக்கப்பட்ட சூழலும் ஒன்றிணைந்தபோது மேலும் மேலும் முஸ்லிம்கள் தேசிய நீரோட்டத்திலிருந்து புறந்தள்ளப்பட்டனர். தனிமைப்படுத்தல் மற்றும் பாரபட்சத்தின் இராப்பகல்கள் இந்திய முஸ்லிம்களை வேட்டையாடியது. இப்பொழுதும் வேட்டையாடிக் கொண்டிருக்கிறது.
சுதந்திரத்திற்கு பிறகு முஸ்லிம்களை சரியான திசையை நோக்கி வழிநடத்தவோ, இதர சமூகத்தினருடன் அவர்களை முன்னேற்ற பாதையில் அழைத்துச்செல்லவோ சரியானதொரு செயல்திட்டத்துடன் கூடிய அமைப்புகள் தேசிய அளவில் உருவாகவில்லை. மாநிலங்கள் அளவிலான முஸ்லிம் அமைப்புகளோ குறுகிய செயல்திட்டங்கள், விருப்பங்களின் அடிப்படையில் சுருங்கிக்கொண்டன. இத்தகைய அமைப்புகள் கூட கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் மட்டுமே உருவானவையாகும்.
முஸ்லிம் இந்தியாவின் விசால பிரதேசமான வட இந்திய மாநிலங்களில் குறிப்பிட்டு சொல்லும் அளவிலான நவீன எழுச்சி இயக்கங்கள் உருவாகவில்லை. இத்தகையதொரு மோசமான சூழல் இந்திய முஸ்லிம்கள் மத்தியில் நிலவிய வேளையில்தான் தொடர்ந்து நடந்த வகுப்புவெறி கலவரங்கள் மூலமாக வலதுசாரி ஹிந்துத்துவா பாசிஸ்டுகள் கொடூரமான தாக்குதல்களை அவர்கள் மீது கட்டவிழ்த்துவிட்டனர். இவையெல்லாம் ஒன்று சேர்ந்து மிகவும் நெருக்கடியில் ஆழ்த்தப்பட்ட முஸ்லிம் சமுதாயத்தை சவால்களை எதிர்கொண்டு வழிநடத்த துணிச்சலான தலைமையோ தொலைநோக்கு பார்வை கொண்ட இயக்கங்களோ உருவாகவில்லை.
பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்டதை தொடர்ந்து இந்தியாவில் முஸ்லிம்களின் வாழ்வு கேள்விக்குறியானது. அப்பொழுது இந்தியாவில் செயல்பட்ட முஸ்லிம் அமைப்புகள் செய்வது அறியாது திகைத்து நின்றன. இச்சூழலில்தான் காலக்கட்டத்தின் தேட்டமாக உயர்ந்த நவீன எழுச்சி சிந்தனைகள் சிறு கூட்டங்களாக உருவெடுத்தன. பின்னர் அவை கட்டமைக்கப்பட்ட இயக்கங்களாக மாறின. அவற்றின் ஒட்டுமொத்த உண்மையான உருவமாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா உருவானது.
தீவிரவாதிகளாகவும், மாற்றத்தை விரும்பாதவர்களாகவும், அந்நியர்களாகவும் அடையாளப்படுத்தப்பட்ட ஒரு சமூகத்தை தேசிய நீரோட்டத்தின்பால் அழைத்து வருவதற்கான முயற்சியைத்தான் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பொறுமையுடன் மேற்கொண்டுவருகிறது.
கேரளாவில் துவங்கி, தமிழகம், கர்நாடகா, ஆந்திரா என தென்னிந்திய மாநிலங்களிலும், தொடர்ந்து வட இந்தியாவின் பல மாநிலங்களிலும் காலடிகளை எடுத்துவைத்து படிப்படியான வளர்ச்சியை பெற்றுவருகிறது பாப்புலர் ஃப்ரண்ட். பிரிந்துகிடந்த சமூகம், கல்வியறிவு இல்லாத சமுதாயம் கட்டுப்பாடும், கட்டமைப்புடன் கூடிய ஒரு இயக்கமாக மாறுவதையும் ஒரே தலைமையின் கீழ் ஒன்றிணைந்து செயல்படுவதையும் முஸ்லிம்களை வெறும் வாக்கு வங்கிகளாக மட்டுமே கண்டுவந்த அரசியல் கட்சிகளும், முஸ்லிம்களை அழித்தொழிப்பதையே தொழிலாக கொண்டுள்ள ஹிந்துத்துவா பாசிச இயக்கங்களும் முற்றிலும் விரும்பாது என்பது உண்மையாகும்.
தீவிரவாத முத்திரைக்குத்தி இயக்கத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்த ஊடகங்களின் துணையுடன் பொய் வழக்குகளையும், அறிக்கைகளையும் உருவாக்கி சிக்கவைப்பதற்கான முயற்சிகளை சில மாநிலங்களில் போலீஸ்-உளவுத்துறை அதிகாரமையங்கள் மேற்கொண்டு வருகின்றன.
சுதந்திர தினம் போன்ற தேசிய தினங்களை உளமார கொண்டாட முஸ்லிம் சமூகத்தின் ஒரு பிரிவினர் முன்வருவது அதிகார வர்க்கத்திடம் காழ்ப்புணர்வை உருவாக்குவது இயல்பே. முஸ்லிம்கள் பயங்கரவாதிகளாகவும், வெடிக்குண்டை தயாரிப்பவர்களாகவும் வாழவேண்டும் என்பதுதான் பாசிஸ்டுகளைப் போலவே சில அரசியல்,அதிகார வர்க்கத்தினர் விரும்புகின்றனர். இவ்வேளையில் அவர்கள் சுதந்திர தினத்தை கொண்டாடுவதும், தேசிய நீரோட்டத்தில் சொந்தமாக இடத்தை தேடுவதும் அத்தகையோரை பதட்டமடைய வைக்கிறது. இத்தகைய காழ்ப்புணர்வும், அல்லது முஸ்லிம் நவீன சமூக இயக்கத்தைக் குறித்த பீதியும் தான் சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சிகளை தடைச்செய்ய இவர்களை தூண்டுகிறது.
இந்நிலையில் அன்னாஹஸாரே வலுவான லோக்பால் மசோதாவிற்காக தான் நடத்தவிருக்கும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு மத்திய அரசு கிடுக்கிப்பிடிகளை போடுவதை தொடர்ந்து பிரதமரை நோக்கி எழுப்பிய, ’அடிப்படை உரிமைகளை முற்றிலும் மறுத்துவிட்டு எந்த முகத்தை வைத்துக்கொண்டு நீங்கள் செங்கோட்டையில் மூவர்ண கொடியை ஏற்றுகின்றீர்கள்’ என்ற கேள்வியை நாம் தமிழகத்தை ஆட்சி புரியும் முதல்வர் ஜெயலலிதாவை நோக்கி கேட்கிறோம்’ ஒரு சமூகம் தமது தேசம் பெற்ற சுதந்திரத்தை கொண்டாடுவதற்கு மறுத்துவிட்டு புனித ஜார்ஜ் கோட்டையில் மூவர்ண தேசிய கொடியை எந்த முகத்தை வைத்துக்கொண்டு ஏற்றினீர்கள்?’
அ.செய்யது அலீ.
நன்றி: தூது ஆன்லைன்
2 விமர்சனங்கள்:
இந்திய சுதந்திர தினத்தை கொண்டாடவிடாமல் தடுத்த இவர்கள் மேல் வழக்கு தொடுத்தால் என்ன? பெற்ற சுதந்திரத்தை கொண்டவிடாமல் தடுக்கும் இவர்களெல்லாம் இந்தியர்களா? இல்லை ஒடுக்கப்பட்டோர் சுதந்திர தினம் கொண்டடாக்கூடாது என்று ஏதேனும், சட்டம் உள்ளதா? நம் இந்தியாவின் மீது நாம் வெளிப்படுத்தும் தேசப்பக்தியை தடுக்கும் இவர்கள் யாருடைய கைக்கூலிகள்?
காவல்துறையினரின் இந்த தடையை கண்டித்து வழக்கு தொடரப்படும்....
கருத்துரையிடுக