மங்களூர்: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வருகின்ற நவம்பர் மாதம் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடத்தவிருக்கும் சமூக நீதி மாநாட்டிற்கான பிரச்சார பொதுக்கூட்டம் அக்டோபர் 11ஆம் தேதி செவ்வாய்கிழமை அன்று மங்களூரில் உள்ள நேரு மைதானத்தில் வைத்து நடைபெற்றது. தேசிய பொதுச்செயலாளர் கே.எம். ஷரீஃப் அவர்கள் கொடியேற்றி இந்நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
சமூக நீதி மாநாட்டிற்கான பிரச்சாரங்கள் நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில நிர்வாகிகளால அந்தந்த மாநிலங்களில் நடத்தப்பட்டுவருகின்றன. அந்தவகையில் கர்நாடக மாநிலத்தில் மாநாட்டிற்கான பிரச்சாரம் நேற்று துவங்கியது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நட்சத்திரம் பொறிக்கப்பட்ட மூவர்ண கொடியை தேசிய பொதுச்செயலாளர் கே.எம். ஷிரீஃப் அவர்கள் கர்நாடக மாநில தலைவர் இல்யாஸ் தும்பே அவர்களிடம் வழங்கி பிரச்சாரத்தை துவக்கி வைத்தார்.
பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடிய இந்நிகழ்ச்சியில் அவர் உரையாற்றும்போது "தங்களுடைய உரிமைகள் பற்றிய போதுமான படிப்பு இல்லாத முஸ்லிம் சமூகம் மத்தியில் சமூக நீதி பற்றிய விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். முஸ்லிம்களுக்கென்று 4% இடஒதுக்கீடு இருந்தாலும் அதில் 1% மட்டுமே அதனை பயன்படுத்துகின்றனர்" என்று கூறினார்.
இந்தியாவில் செயல்படும் மிகப்பெரிய தீவிரவாத அமைப்பு ஆர்.எஸ்.எஸ் தான் என்றும், இந்தியாவில் நடைபெற்ற முதல் தீவிரவாத தாக்குதல் தேசப்பிதா மஹாத்மா காந்தி கொல்லப்பட்டது தான். இவ்வாறு இருக்க மாலேகான், அஜ்மீர், மக்கா மஸ்ஜித் போன்ற இடங்களில் நடந்த தாக்குதல்களை யார் நிகழ்த்தினார்கள் என்பதை சொல்லித்தெரியவேண்டியதில்லை. இவை அனைத்தையும் நிகழ்த்தியது ஆர்.எஸ்.எஸ் தீவிரவாத இயக்கம் தான் என்ற உண்மை ஏற்கனவே உலகத்திற்கு தெரிந்துவிட்டது" என்று கூறினார். பிற்படுத்தப்பட்ட மக்கள் ஒன்றினைந்து இந்த நாட்டிலிருந்து அநீதியை அகற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
தேசிய பொதுச்செயலாளர் கே.எம்.ஷரீஃப் அவர்கள் உரையாற்றும்போது சமூக நீதி மாநாடு நடத்துவதின் முக்கிய கரு சமூக சமத்துவம், பொருளாதார சமத்துவம், வாய்ப்பு வழங்குவதில் சமத்துவம், மக்களின் முன்னேற்றத்திற்காக செயல்பாடுகளை அமைத்துக்கொள்வதில் சமத்துவம் பேணப்படவேண்டும் என்பதேயாகும். சமூக நீதி மாநாடு நடத்துவதற்கான நோக்கம் மக்களுக்கு நாட்டின் அரசியலமைப்பு பற்றியும், ஜனநாயகத்தைப் பாதுகாப்பது பற்றியும், சமூகத்திற்கு கிடைக்கவேண்டிய நீதியை பற்றிய விழிப்புணர்வு ஏற்படவேண்டும் என்பதேயாகும். இவ்வாறு தனது உரையில் பொதுச்செயலாளர் குறிப்பிட்டு பேசினார்.
கர்நாடக மாநில தலைவர் இலியாஸ் தும்பே அவர்கள் பேசும்போது சமூக நீதி என்பது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் முக்கியக்கொள்கைகளில் ஒன்றாகும். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் லட்சியம் இந்தியாவில் வாழக்கூடிய அனைத்து மக்களுக்கும் சமூக, பொருளாதாரம் மற்றும் அரசியல் ஆகியவற்றில் சம நீதி கிடைக்கவேண்டும் என்பது தான். சமூக நீதி என்பது ஏனோ ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டும் மறுக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு குடிமகனும் நீதிக்காக போரட முன்வரவேண்டும். பாப்புலர் ஃப்ரண்டோடு கைகோர்த்து சமூக நீதிக்காக போராட வரும்படி மக்களுக்கு அழைப்புவிடுத்தார்.
சமூகப்பிரமுகர்கள் பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்கள். கர்நாடக மாநில பொதுச்செயலாளர் ரியாஸ் பாஷா நன்றியுரை நிகழ்த்த நிகழ்ச்சி நிறைவுற்றது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக