புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

அணு உலை எதிர்ப்பு போராட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ கட்சி ஆதரவு!

3 நவம்பர், 2011

"கூடன்குளம் அணுஉலை" கூடத்தை மூட வலியுறுத்தி கூடன்குளம் அருகே இடிந்தகரை கிராம மக்கள் தொடர்ந்து பல மாதங்களாக உண்ணாவிரதம் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது. எஸ்.டி.பி.ஐ-ன் மாநிலத்தலைவர் கே.கே.எஸ்.எம் தெஹ்லான் பாகவி கடந்த மாதம் இடிந்தகரை கிராமத்திற்கும் சென்று அங்கு நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி நெல்லையில் எஸ்.டி.பி.ஐ-ன் அணு உலை பணிகளை உடனே நிறுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தியது. இந்நிலையில் நேற்று எஸ்.டி.பி.ஐ-ன் தேசிய பொதுச்செயலாளர் ஏ.சயீத் இடிந்தகரை கிராமத்திற்கு வருகை தந்தார். அவருடன் எஸ்.டி.பி.ஐ-ன் தேசிய செயலாளர் டாக்டர் ஆவாத் ஷரீஃப், எஸ்.டி.பி.ஐ-ன் கேரள மாநில தலைவர் நஸ்ருதீன், கேரள மாநில பொதுச்செயலாளர் மனோஜ்குமார், தமிழ் மாநில தலைவர் தெஹ்லான் பாகவி, பொதுச்செயலாளர் நெல்லை முபாரக், மற்றும் எஸ்.டி.பி.ஐ-ன் மாநில மாவட்ட நிர்வாகிகளும் வருகை தந்தனர்.

 
எஸ்.டி.பி.ஐ-ன் தலைவர்கள் இடிந்தகரையில் தொடர்ந்து நடைபெற்று வரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து உரை நிகழ்த்தி கூடன்குளம் அணு உலை எதிர்ப்பு போராடத்திற்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர். தேசியப் பொதுச்செயலாளர் ஏ. சயீத் உரையாற்றும் போது எஸ்.டி.பி.ஐ கட்சி அணு சக்திக்கு மாற்றான திட்டங்களை நாட்டின் வளர்சிக்கு செயல்படுத்த வேண்டும் என்ற கொள்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதை தனது கொள்கையாகவும் கொண்டுள்ளது.

இடிந்த கரை மக்களின் இந்த போராட்டம் நான் நினைத்ததை விட ஆச்சரியப்படும் விதத்தில் எழுச்சியுடன் நடைபெற்று வருகிறது. இது நமது சந்ததிகளுக்கான போராட்டம். மத்திய அரசு முதலாளித்துவத்தின் காரணமாகவே இது போன்ற மக்கள் விரோத‌ திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நீங்கள் எவ்வளவு இடைஞ்சல் ஏற்பட்டாலும் இந்த போராட்டத்தில் இருந்து பின்வாங்கக்கூடாது. எஸ்.டி.பி.ஐ உங்களோடு இணைந்து போராடும் என தெரிவித்தார்.




அடுத்து உரை நிகழ்த்தி பேசிய செயலாளர் டாக்டர் ஆவாத் ஷரீஃப் அணு உலையினால் ஏற்படும் பாதிப்புகளை நாம் எண்ணிப்பார்க்க முடியாது. இந்தியாவை விட விஞ்ஞான  வளர்ச்சியில் பல ஆண்டுகள் முன்னிலையில் உள்ள ஜப்பான் புகுஷிமா அணு உலை பாதிப்புக்கு பின் தனது நிலையை மாற்றி பல அணு  உலைகளை மூடிட தீர்மானித்துள்ளது. அது போலவே உலகின் பல நாடுகள் புதிய அணு உலைகளை மூடப்போவதாக அறிவித்துள்ள நிலையில் இந்தியா புதிய அணு உலை திட்டங்களை செயல்படுத்துவது கண்டிக்கத்தக்கது. உங்களின் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகிறேன் எனக் கூறினார்.

அடுத்து கேரள மாநில தலைவர் நஸ்ருதீன் எலமரம் உரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் அணூ உலையால் ஏற்படும் பாதிப்புகள் மிகக் கொடூரமானது. கேரள மாநிலம் இந்த கூடன்குளத்திற்கு மிக அருகிலேயே உள்ளது. கூடன்குளத்தில் ஒரு சிறிய பாதிப்பு ஏற்பட்டாலும் அது கேரள மாநிலத்தையும் பெருமளவு பாதிக்கும் எனும் போது இந்த சுற்றுவட்டார பகுதிகளை பற்றி சொல்லத்தேவையில்லை.

கூடன்குளம் அணு உலைக்கெதிரான உங்களின் போராடத்தை ஆதரித்து கேரளாவில் நாங்கள் போராட்டங்களையும், பிரச்சார இயக்கங்களையும், நடத்த தீர்மானித்துள்ளோம். அது போன்று கேரள சட்டமன்ற உறுப்பினர்களை சந்தித்து அவர்கள் மூலம் இப்பிரச்சனைகளை கேரள சட்டசபையில் எழுப்ப உள்ளோம் எனத் தெரிவித்தார்.



அடுத்து உரை நிகழ்த்திய தெஹ்லான் பாகவி தனது உரையில் நான் எஸ்.டி.பி.ஐ-ன் சார்பாக நீங்கள் போராட்டம் நடத்த ஆரம்பித்த 3ஆம் நாளே இங்கே வருகை தந்து இங்கு உரை நிகழ்த்தினேன். நெல்லையில் கடந்த செப்டம்பர் 23ல் ஆர்ப்பாட்டத்தை நடத்தினோம். இன்று தேசிய தலைவர்களோடு மீண்டு இங்கு வருகை தந்ததை பெருமையாக கருதுகிறேன்.

நம்மை ஆளுகிற மத்திய அரசுக்கு மக்களை பற்றி, மக்களை எதிர் நோக்கும் அபாயங்களைப் பற்றி கவலையில்லை. அதனால் தான் மக்கள் பிரச்சனைகளுக்காக போராட்டஙகள் நடைபெறுகிற போது அதற்கு மதிப்பளிக்காமல் மத்திய அரசு தனது செவிகளை மூடிக்கொள்வதோடு தாழ்த்திக் கொள்வதோடு மட்டும் மாத்திரமல்ல, மக்கள் போராட்டங்களை திசை திருப்ப மத்திய அரசு முயற்சிக்கிறது.

வடகிழக்கு மாநிலங்களில் நடைபெறும் பழங்குடியின மக்களின் போராட்டமானாலும், விவசாயிகளின் போராட்டமானாலும் இதே வழிமுறையில் தான் இன்று உங்களின் போராட்டங்கள் பற்றி வெளிநாட்டு பிண்ணணி என்று தவறான வதந்திகளை அரசு பரப்பி வருகிறது.

இப்படி தான் முஸ்லீம்களின் நலனுக்காக, உரிமைகளுக்காக போராடும் இயக்கங்கள், கட்சிகளை வெளி நாட்டு தொடர்பு என தவறான வதந்திகளை உளவுத்துறை பரப்பி வருகிறது. இது பொய் என்பதை அனுபவ பூர்வமாக நீங்கள் இப்போது உணர்ந்து இருப்பீர்கள். இப்போராட்டம் தொடரும் போது அடக்குமுறைகள் அதிகமாகலாம். அவதூறு செய்திகள் தொடரலாம். எது நடந்தாலும் வெற்றி அல்லது வீரமரணம் என்னும் நிலையை அடையும் வரை உங்கள் போராட்டம் தொடர வேண்டும். எஸ்.டி.பி.ஐ உங்களுடன் எல்லா  நிலைகளிலும் துணை நிற்கும். இவ்வாறு அவர் உரை நிகழ்த்தினார். பின்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயக்குமார் அவர்களுக்கு தேசியப் பொதுச்செயலாளர் ஏ.சயீத் அவர்கள் பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்து எஸ்.டி.பி.ஐ-ன் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் விடைப்பெற்றனர்.






0 விமர்சனங்கள்:

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010