‘‘ரபீஆ, கல்யாணம் பண்ணவில்லையா?’’ - இறையில்லத்தில் தன்னோடு எப்பொழுதும் ஒன்றாக இருக்கும் இளைஞர் ரபீஆவைப் (ரழி...) பார்த்து ஒரு நாள் எம்பெருமானார் முஹம்மத் (ஸல்...) அவர்கள் கேட்டார்கள்.
ரபீஆ ஓர் ஏழை. சொந்த வீடு இல்லை. அவருக்கென்று ஒரு குடும்பமில்லை. இறுதித்தூதருக்கு பணிவிடைகள் புரிந்துகொண்டு இறையில்லத்திலேயே அவரது வாழ்க்கை கழிந்துகொண்டிருந்தது. திருமணம் முடித்தால் மனைவியுடன் வசிப்பதற்கு வீடு வேண்டும். மனைவிக்கு செலவுக்குப் பணம் கொடுக்க வேண்டும். இதெல்லாம் தனக்குச் சாத்தியமில்லை என்றே ரபீஆ (ரழி...) எண்ணியிருந்தார்.
‘‘எனக்குக் கல்யாணம் வேண்டாம் அல்லாஹ்வின் தூதரே, குடும்பத்தை நடத்துவதற்கு எனக்கு சக்தியில்லை.’’ - பெருமானாரின் கேள்விக்கு ரபீஆவின் பதில் இவ்வாறாக இருந்தது.
சில நாட்கள் கழிந்தன. இன்னொரு சந்தர்ப்பத்தில் அண்ணலார் (ஸல்...) அவர்கள் இதே கேள்வியைக் கேட்டார்கள். ரபீஆவும் அதே பதிலையே சொன்னார். மூன்றாவது முறை அண்ணலார் இதுகுறித்து வினவியபொழுதுதான் ரபீஆவுக்கு ஏதோ பொறி தட்டியது. அண்ணலார் காரியமில்லாமல், உரிய காரணமில்லாமல் மீண்டும் மீண்டும் இதனைக் கேட்க மாட்டார்களே என்றெண்ணிய ரபீஆ (ரழி...) அண்ணலாரிடம் இவ்வாறு கேட்டார்:
‘‘அல்லாஹ்வின் தூதரே, வீடும் குடும்பமுமில்லாத எனக்கு யார் பெண் தருவார்கள்?’’
அண்ணலார் அதற்கு பொறுப்பேற்றுக்கொண்டார்கள். ஒரு குடும்பம் உண்டு. அங்கே ஒரு பெண் இருந்தார். அவரைக் கல்யாணம் செய்து கொள்ளச் சொல்லி ரபீஆவை அண்ணலார் அனுப்பி வைத்தார்கள்.
நல்லதொரு குடும்பம் அது. தேவைக்குப் பண வசதியும் இருந்தது. தங்கள் பெண் பிள்ளைக்கு அல்லாஹ்வின் தூதரே ஒரு வரனை அனுப்பியதை அவர்கள் அல்லாஹ்வின் அருளாகவே கருதினார்கள். ரபீஆவின் வறுமை அவர்களுக்கு ஒரு பொருட்டாகவே படவில்லை.
‘‘அல்லாஹ்வின் தூதருக்கு நல்லது நடக்கட்டும். அவர்கள் அனுப்பி வைத்த உங்களுக்கும் நல்லது நடக்கட்டும். திருமணத்திற்கு நாங்கள் தயார்’’ என்றார்கள் அக்குடும்பத்தார்.
அந்த வீட்டிலிருந்து திரும்பும்பொழுது ரபீஆவுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. உண்மையில் திருமணம் நடந்து விடும் போல் தெரிகிறது. மஹர் பணம் கொடுக்கவோ, வலிமா எனும் திருமண விருந்து அளிக்கவோ தன்னிடம் சல்லிக் காசு கூட கிடையாது.
அல்லாஹ் ஏதாவதொரு வழியைக் காண்பிப்பான் என்று தன்னைத் தானே சமாதானப்படுத்திக்கொண்டு அண்ணலாரிடம் திருமணத்திற்குப் பெண் வீட்டார் சம்மதித்ததைக் கூறினார் ரபீஆ. அடுத்தடுத்த காரியங்கள் அண்ணலாரின் அறிவுரைப்படி அருமையாக அரங்கேறின.
ரபீஆவின் சில தூரத்துச் சொந்தங்களை அண்ணலார் அழைத்தார்கள். ரபீஆவின் திருமணத்திற்கு உதவியாக இருக்கும்படி அவர்களிடம் கூறினார்கள். எளிமையான திருமணத்திற்கு என்ன ஏற்பாடுகள் வேண்டிக் கிடக்கிறது? அண்ணலாரே அத்தனை ஏற்பாடுகளையும் செய்திருக்க முடியும். இருந்தும் இப்படிச் செய்தார்கள் என்றால் தனக்கும் சொந்தங்கள் உண்டு என்ற எண்ணம் ரபீஆவுக்கு வந்து அவருக்கு தைரியமூட்டும் என்பதாலேயே.
ரபீஆவுக்கு வீடு அமைத்துக்கொள்ள சிறு நிலமும் அளித்தார்கள் அண்ணலார். திருமணம் முடிந்தது. ரபீஆவின் குடும்பம் அங்கே தழைத்தோங்கி வளர்ந்தது.
இறையில்லத் திண்ணையில் அனாதையாயிருந்த ஒரு தோழரை சாதாரண, சராசரி வாழ்க்கைக்கு கருணை நபியவர்கள் கைப்பிடித்துக் கொண்டு வந்த கலையைக் கவனித்தீர்களா?
சமூகத்தில் ரபீஆவைப் போல் பல பேர் உண்டு. மிகப் பெரிய முயற்சிகள் எதுவும் செய்யாமலேயே அவர்களைச் சாதாரண வாழ்க்கைக்குக் கொண்டு வர முடியும். முன் கையெடுக்க ஒரு ஆள் இருந்தால் போதும் - சமுதாயத்தில் அனாதைகளுக்கு ஆதரவு கிடைக்கும். அல்லல் படுபவர்களுக்கு வாழ்வு கிடைக்கும். மொத்தத்தில் சமுதாயம் துள்ளியெழும்!
தமிழில் : MSAH
நன்றி : விடியல் வெள்ளி ஆகஸ்ட் 2009
0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக