புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

பிஞ்சில் பழுத்த பழம்!

8 மார்ச், 2011

தானாகவே முற்றிக் கனிந்த பழத்துக்கு இருக்கும் சுவையே தனிதான். அதுவே பிஞ்சில் பழுத்ததாக இருந்தால் அதேயளவு சுவையை எதிர்பார்க முடியுமா? அவ்வாறுதான், நம்முடைய குழந்தைகள் தங்களுடைய வயதுக்கும் வளர்ச்சிக்கும் ஏற்றபடி வளரக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு பெற்றோராகிய நாம் போதிய சிரத்தையும் கரிசனையும் எடுத்துக்கொள்ளத்தவறிவிட்டால், அவர்களின் எதிர்கால நல்வாழ்வு சிதைந்து விட அதுவே வழியமைத்துக் கொடுத்துவிடும் என்பதில் ஐயமில்லை.


குழந்தைகளுக்கு எது தேவை என்பதில் அதிக அக்கறை காட்டும் நம்மில் அனேகர், அவர்களுக்கு எதெல்லாம் தேவையில்லை என்பதை நிர்ணயிப்பதில், வரையறுப்பதில் சில சமயங்களில் கோட்டைவிட்டு விடுகின்றோம். இதனைச் சொன்னதும் உதாரணமாக நம் மனக்கண் முன் வருவது தொலைக்காட்சி மட்டும்தான். அதில் குழந்தைகளின் வயதுக்கு மீறிய நிகழ்ச்சிகளை, குறிப்பாக தொடர் நாடகங்களை (சீரியல்கள்) அவர்களையும் வைத்துக்கொண்டே நாம் பார்ப்பதால் ஏற்படக்கூடிய  விளைவுகளை சொல்லித்தெரிய வேண்டியதில்லை. ஆனால், இது தவிர நமது அன்றாட உரையாடல்களின் போதும் நாம் மிகக் கவனமாக இருக்கவேண்டும் என்பது நம்மில் பலருக்குத் தோன்றுவதில்லை. அதாவது, குழந்தைகளின் முன்னிலையில் எதை பேசுவது, எதைப் பேசக்கூடாது என்ற கட்டுப்பாடு பெற்றோராகிய, பெரியோராகிய நமக்கு கண்டிப்பாக இருக்க வேண்டும்.

அது ஒரு விடுமுறை நாள். மாலை வேளை. நாங்கள் குடும்ப சமேதராய் ஒரு நண்பரின் வீட்டுக்க்ப் போயிருந்தோம். கணவன் மனைவி இரண்டு பேருமே மார்க்கக் கல்வி கற்று, அழைப்புப் பணியில் ஈடுபட்டு வருபவர்கள். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள். நாம் சென்றிருந்த சமயத்தில் அங்கு ஏற்கனவே இன்னும் இரண்டு குடும்பங்கள் சமூகமளித்திருந்தன. ஆண்கள் முன்னறையில் தமது உரையாடலில் சுவாரசியமாக ஈடுபட்டிருந்தனர். பெண்கள் சமையலறையில் அமந்த படி அளவளாவினோம். பெண்கள் அடிக்கும் அரட்டையில் கலகலப்புக்கா பஞ்சம்? சிரித்து சிரித்துப் பேசுகையில் பேச்சு எங்கெல்லாமோ சுற்றித் சுழன்றது. பொதுவாகப் பேசுவதற்கு சற்றே தயங்கக்கூடிய விஷயங்கள் கூட அங்கே


சர்வ சாதாரணமாக கலந்துரையாடப்பட்டதில் எனக்கு சற்றே வியப்பாகவும் சங்கடமாகவும் போய்விட்டது. எப்போது முன்னறையிலிருந்து கணவர் அழைப்பார், எழுந்து செல்வதற்கு என்று அவஸ்தையோடு நிமிடங்கள் கழிந்து கொண்டிருந்தன. இதற்கிடையில் சமையலறையில் ஓர் ஓரமாக நின்றபடி அந்தச் சகோதரியின் மூத்த மகளும் வாயை "ஆ" வென்று திறந்தவண்ணம் இந்தக் கதைகளையெல்லாம் கேட்டுக்கொண்டிருப்பதை எதேச்சையாக கண்ணுற்ற எனக்கு அதிர்ச்சி. அந்தக் குழந்தையைப் பெயர் சொல்லி அழைத்து, "என்னம்மா, நீ மட்டும் இங்கே நிற்கிற? போய் மற்ற பசங்களோட சேர்ந்து வெளியே விளையாடேன்" என்றேன். நான் அப்படிச் சொன்னது அந்தச் சிறுமிக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை என்பது முகத் குறியிலிருந்தே புரிந்தது, எனக்கு. மெல்லப் போவது போல போக்குக் காட்டிவிட்டு சற்றைக்கெல்லாம் தண்ணீர் குடிக்க என்று அங்கே வந்தவள், மீண்டும் பழையபடி நின்று கொண்டு அங்கு பேசுவதையெல்லாம் கேட்டுக் கொண்டு நிற்கலானாள். இதனை அச்சிறுமியின் தாய் சற்றும் பொருட்படுத்தாது எனக்கு அதிர்ச்சியை மட்டுமின்றி கோபத்தையும் ஏற்படுத்தியது. "அடுத்தவர்களுக்கு மார்க்க உபதேசம் புரியும் இந்தப் பெண்மணி, தன் குழந்தையின் விஷயத்தில் இப்படி அலட்சியமாக இருக்கலாமா?" என்று எண்ணமிடுவதை என்னால் தவிர்க்க முடியவில்லை. எனவே, சற்று பொறுமையிழந்து போய், "சிஸ்டர், உங்க மகளை வெளியே பசங்ககூடப் போய் விளையாடச் சொல்லுங்க. இங்கேயே எத்தனை நேரம் நின்னுட்டிருக்கப்போறா? பாவம், காலும் வலிக்கப் போவுது குழந்தைக்கு" என்று அமைதியான குரலில் மெல்லச் சொன்ன பின்பு அவர் அவளை அனுப்பி வைத்தார். அதன் பிறகும் இரண்டொரு தடவைகள் இதே மாதிரியான சம்பவங்கள் என் முன்னிலையில் நடந்தன். எனவே, ஒரு நாள் வெளிப்படையாகவே அந்தத் தாயாரைத் தனேயே அழைத்து, பெரியோர்கள் பேசும்போது பிள்ளைகள் அங்கு நிற்பதை அனுமதிப்பது எல்லா நேரத்திலும் பொருத்தமாக இராது என்பதைத் தெளிவுபடுத்த வேண்டியதாயிற்று.

குழந்தைகளின் உலகம் வித்தியாசமானது, விசித்திரமானது. அவர்களின் சின்னஞ்சிறிய உள்ளங்களில் வயதுக்கு மீறிய விஷயங்கள் நுழைவதற்கு நாம் ஒரு போதும் அனுமதிக்கக்கூடாது. நம்மைப் படைத்து பரிபாலிக்கும் அல்லாஹ்  குர்ஆனிலே,

"ஈமான் கொண்டவர்களே! உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்(அடிமை)களும், உங்களிலுள்ள பருவம் அடையாச் சிறுவர்களும் (உங்கள் முன் வர நினைத்தால்) மூன்று நேரங்களில் உங்களிடம் அனுமதி கோர வேண்டும்; ஃபஜ்ரு தொழுகைக்கு முன்னரும், நீங்கள் (மேல் மிச்சமான உங்கள் உடைகளைக் களைந்திருக்கும் "ளுஹர்" நேரத்திலும், இஷாத் தொழுகைக்கு பின்னரும் - ஆக இம்மூன்று நேரங்களும் உங்களுக்காக (அமையப் பெற்றுள்ள) மூன்று அந்தரங்க வேளைகளாகும் - இவற்றத் தவிர (மற்ற நேரங்களில் மேல் கூறிய அடிமைகளும், குழந்தைகளும் அனுமதியின்றியே உங்கள் முன் வருவது) உங்கள் மீதும் அவர்கள் மீதும் குற்றமில்லை; இவர்கள் அடிக்கடி உங்களிடமும் உங்களில் ஒருவர் மற்றவரிடம் வரவேண்டியவர்கள் என்பதினால்; இவ்வாறு, அல்லாஹ் தன் வசனங்களை உங்களுக்கு விவரிக்கின்றான்; மேலும் அல்லாஹ் (யாவற்றையும்) நன் கறிந்தவன்; ஞானம் மிக்கவன். " (24:8)

என்றும் அழகாக எடுத்துக்கூறியிருப்பதை நாம் அறிவோம். இந்த வசனங்களில் கூறியுள்ளபடி, அந்தரங்கமான நேரங்களில் அருகில் வர நமது குழந்தைகள் நம்மிடம் அனுமதி கேட்க வேண்டும் என்பது நமக்குத் தெரியும். ஆனால், அதே போல அந்தரங்கமான விஷயங்களையோ குழந்தைகளுக்குச் சற்றும் தொடர்பில்லாத, அவர்களுக்குத் தேவையற்ற விஷயங்களையோ அவர்களின் முன்னிலையில் கலந்துரையாடக்கூடாது என்பதை நம்மில் எத்தனை பேர் தெரிந்துள்ளோம்? மேற்படி அல்குர்ஆன் வசனங்களின் கட்டளைக்குப் பின்னால் உள்ள தே காரணம், இதற்கும் பொருந்தும் என்பதை நாம் உணர்கிறோமா?

நான் மேலே விவரித்த சம்பவத்தில், அந்தப் பெண் குழந்தை தன் வயதொத்த பிள்ளைகளோடு விளையாடுவதை விட பெரியவர்களின் அரட்டைகளைச் செவிமடுப்பதில் அதிக ஈடுபாடு காட்டுகிறது. இதன் நாளைய விளைவு எப்படி அமையக்கூடும்? அரட்டை, ஊர் வம்பு முதலான விஷயங்களில் விளையாட்டை விட, படிப்பைவிட சுவாரசியமாக ஈடுபடும் போக்கு முளைவிடலாம். வளர்ந்து பெரியவளான பின்பும் இந்தம் பழக்கம் தொடர்ந்தால் அது, அவளின் எதிர்கால குடும்ப வாழ்வில் எத்தகைய மோசமான விளைவுகளை, பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும் என்பதையிட்டு நாம் சிந்திக்க வேண்டும். நமது குழந்தை, தேவையற்ற பேச்சுக்களில் ஈடுபடவும், ஒட்டுக் கேட்கவும், கேட்பதை ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்தில் போய் சொல்லவும் நாம் இடம்கொடுக்கலாமா? ஒரு போதும் கூடாது.

இதில் சிலர், தம் பிள்ளைகளிடம் எங்காவது போய் வந்தபின், "அங்கே அவங்களெல்லாம் என்ன பேசிக் கொண்டார்கள்?" என்று கேட்பதுமுண்டும். இதற்குக் காரணம் அறியாமை மட்டுமல்ல. தூரநோக்கோடு இதன் பாரதூரம் பற்றிச் சிந்திக்கத் தெரியாமையும்தான். ஒட்டுக் கேட்டல், புறம் பேசுதல், கோள் சொல்லுதல் என்பன மிக இழிவான செயல்கள். அவற்றால் உலக வாழ்க்கையில் குடும்பங்களிடையே, சமூகங்களிடையே எத்தனையோ பாரதூரமான பிரச்சனைகள், நெருக்கடிகள் தோன்றுகின்றன என்பதை நாம் அனுபவத்தில் கண்டிருப்போம். பரஸ்பர அன்பு, நட்பு, மரியாதை, கெளரவம் முதலான இன்னோரன்ன நல்ல அம்சங்களை அப்படியே சிதைத்து விடக்கூடிய புல்லுருவிகளாய் இந்த இழிசெயல்கள் அமைந்துள்ளன. அல்லாஹ் தன் திருமறையில், "குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான்." (104:1) என்றும்,

"முஃமீன்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும் உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேச வேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும் நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொளபவன்; மிக்க கிருபை செய்பவன்." (49:12)
என்றும் எச்சரிக்கின்றான். செத்த பிணத்தின் மாமிசத்தைப் புசிப்பது போன்ற இழிவான, அருவருக்கத்தக்க செயல்களாக அமைந்துள்ளன என்று ஓர் உவமை மூலம் நமக்கு உணர்வூட்டுகிறான். எனவே, பெற்றோராகிய, பெரியோர்களாகிய நாம் இத்தகைய இழிசெயல்களில் ஈடுபடுவதோடு, பிள்ளைகளின் முன்னிலையில் அவற்றைச் செய்து அவர்களுக்குப் பிழையான முன்னுதாரணமொன்றை வழங்கி, அவர்களையும் வழிகெடுப்பதன் மூலம் இரட்டிப்பான தீமையை சம்பாதிக்கின்றோம். எந்தக் குழந்தைக்கும் முதல் பள்ளிக்கூடமாகத் தன்னுடைய வீடுதான் அமைகிறது. அதிலும் தனது தாயே ஒரு குழந்தையின் முதல் ஆசிரியராக அமைகின்றாள். அந்த வகையில் நமது சொல், செயல் முதலான அனைத்திலிருந்தும் நமது பிள்ளைகள் முன்மாதிரியொன்றைப் பெறும் விதத்தில் வாழவேண்டி தேவை நமக்குள்ளது. எனவே, தாய்மார்களுக்கு இஸ்லாம் அளவற்ற சிறப்பினை வழங்கியிருப்பதைப் போலவே அளவற்ற பொறுப்புக்களையும் வழங்கியிருக்கிறது என்பதை தாய்மார்களாகிய நாம் ஒரு போதும் மறந்து விடக்கூடாது.

நம்முடைய நடவடிக்கைகள் அனைத்தும் ஏதாவது ஒரு வகையில் நமது பிள்ளைகளைப் பாதிக்கிறது என்பதை நாம் எப்போதும் நினைவிற் கொள்ளவேண்டும். தாய் - தந்தையரிடையே அடிக்கடி சண்டையும், தர்க்கங்களும் இடம்பெறும் குடும்ப சூழல் அமையப்பெற்ற குழந்தைகள் உளவியல் ரீதியாகப் பெரிதும் பாதிக்கப்படுவதோடு, அவர்களில் அனேகமானவர்கள் வன்முறையாளர்களாக, போதை முதலானவற்றுக்கு அடிமையானவர்களாக உருவாகின்றனர் என்றும், மனத்தடை, மன அழுத்தம், தூக்கமின்மை, நரம்புத் தளர்ச்சி முதலானவற்றினால் தமது வாழ் நாள் முழுவதும் பாதிக்கப்படுகின்றார்கள் என்றும் மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. "அமெரிக்க மனோதத்துவ நிபுணரான மைக்கல் யெப்கோ, தொடர்ச்சியான மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் பெற்றோரின் பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களாகும் போது தாமும் அதே பிரச்சனைக்கு முகம் கொடுக்க நேர்கிறது என்றும், ஒரு தாய் எத்தகைய மன நிலையில் வாழ்கிறாள் என்பது அவளின் குழந்தையின் எதிர்கால மனநலத்தைத் தீர்மானிப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றது என்றும் கூறுகின்றார்" ("ராவய" வாரப் பத்திரிக்கை 27.09.2009).

இந் நிலையில், குழந்தைகளுக்குரிய வீட்டுச்சூழலை நல்ல முறையில் வகுத்துக் கொடுப்பதும், அவர்களின் வயதுக்கு மீறிய அல்லது அவர்களுக்குத் தேவையில்லாத விஷயங்களைப் பார்பது, செவிமடுப்பது முதலானவற்றிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதும் பெற்றோராகிய நமது கடமையே. குடும்பப் பிரச்சனைகள், பிறருடனான தமது முரண்பாடுகள், மனக்கசப்புகள் என்பன பற்றியெல்லாம் குழந்தைகளின் முன்னிலையில் கலந்துரையாடுவதைக் கண்டிப்பாக நாம் தவிர்த்துக்கொள்ளவேண்டும். அவர்களின் முன்னால் எப்போதும் நல்ல விஷயங்களை மட்டுமே பேசுவது என்று உறுதி மொழியை நாம் அனைவரும் எடுத்துக்கொள்வதன் மூலம் இறையருளால் அவர்களின் சிறப்பான எதிர்காலத்திற்கு நாம் உத்தரவாதம் அளிக்கிறோம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அவ்வாறில்லாதபட்சத்தில் பின்வரும் உண்மைச் சம்பவத்தில் இடம்பெற்றது போன்ற அசம்பாவிதங்களுக்கு நாமும் முகம்கொடுக்க நேரலாம். இரண்டு குடும்பங்களுக்கிடையில் பெரும் மனக்கசப்பு. வருடக் கணக்காக இருதரப்பாரும் பேசிக் கொள்வதில்லை. அதில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மற்ற குடும்பத்தவரால் தமக்கு இழைக்கப்பட்ட அநியாயங்கள், கொடுமைகள் பற்றியெல்லாம் அடிக்கடி பேசிக்கொண்டிருப்பார்கள். அவ்வாறு பேசுவதன் மூலம் கொஞ்சம் ஆசுவாசமுடைய அவர்கள் நினைத்திருக்கலாம். காலங்கள் கடந்தன பழைய பகைமையை மறந்து இரு குடும்பங்களும் ஒன்றி ணைந்தன. தாத்தா - பாட்டி கால வைராக்கியங்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விட்டன. (அவர்கள் அப்படித்தான் நினைத்தார்கள்) மூன்றாவது தலைமுறை தலைதூக்கி விட்டது. திருமண சம்பந்தம் ஒன்றை ஏற்படுத்துவதன் மூலம் இரு குடும்பத்தினரும் தமது உறவைப் பலப்படுத்த எண்ணி, அதனைச் செயற்படுத்தினர். தம்பதியர் தனிக்குடித்தனம் போயாயிற்று.

சில மாதங்கள் கழித்து திடீரென அந்தப் பெண், அலங்கோலமான நிலையில் தன் பெட்டியோடு தாய்வீடு வந்து நிற்கிறாள், தனியாக. அந்தக் குடும்பமே பதைபதைக்கிறது. தனிக் குடித்தனம் செய்கிறேன் பேர்வழி என்று மண்ப்பெண்ணைக் கூட்டிப் போனவன், அவளின் பாட்டியால் தனது குடும்பம் அனுபவித்த கொடுமை
களை ஒவ்வொன்றாகச் சொல்லிச் சொல்லி அவளைக் கொடுமைப்படுத்தியிருக்கிறான். அவளின் உடல் முழுக்க ரணமாக்கி இருக்கிறான். அந்தக் குடும்பத்தைப் பழுவாங்குவதற்காகத்தான் அவளைத் திருமணமே முடித்ததாகக் கூறிகூறி அவளை சித்திரவதை செய்திருக்கிறான். இந்தச் சம்பவம் இரண்டு குடும்பங்களுக்குமே பேரதிர்ச்சியைத் தந்தது. எவ்வளவோ எடுத்துக்கூறியும் அவன் மனம் மாறவே இல்லை. இறுதியில் அந்தத்திருமணம் விவாகரத்தில் முடிந்துவிட்டது. மணமகனின் வீட்டார் ரொம்பவும் மனம் வருந்தி மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்கள். ஆனால், அதனால அந்தப் பெண் தான் செய்யாத குற்றத்துக்காக அனுபவித்த கொடுமைகள் இல்லையென்று ஆகிவிடுமா? இழந்து போன வாழ்க்கை திரும்பக் கிடைத்துவிடுமா? தான் எதிர்கொண்ட கொடூரங்களால் ஏற்பட்ட உளவியல் ரீதியான பாதிப்பு முழுமையாக மறைந்துபோய் விடுமா?

இந்தக் கேள்விகளுக்கான விடை "இல்லை" என்பதுதான். ஆனாலும் இப்படியான ஓர் அசம்பாவிதம் ஏற்படுவதற்குப் பின்புலமாக அமைந்த காரணங்கள் எவை என்று சிந்திப்பது இன்றியமையாதது. தமது மன ஆறுதலுக்காக அடிக்கடி பழைய சம்பங்களை மீட்டி மீட்டிப் பேசிக்  கொண்டிருந்த அந்தக் குடும்பத்தினர், குறிப்பாக அவனின் மிகுந்த பாசத்துக்குரிய பாட்டியும், அம்மாவும், அப்பெண்ணின் குடும்பத்தினர் மீதான மிகக் கடுமையான வெறுப்பைத் தம்மையறியாமலேயே அவனின் மனதில் விதைத்துள்ளனர். பிஞ்சு மனதில் மீண்டும் மீண்டும் பதிந்த பழைய துக்ககரமான சம்பவங்களால் முளைவிட்ட வெறுப்பு , அவன் வளர வளர ஆழமாக வேரூன்றி விட்டது. அவன் அந்த வெறுப்பையும் வஞ்சத்தையும் தன் குடும்பத்திலும் யாரிடமும் வாய்விட்டுக் கூறாமல் தனக்குள்ளேயே புதைத்து வைத்திருக்கிறான். பழிவாங்குவதற்கேற்ற சந்தர்ப்பம் வாய்க்கும் வரை காத்துக் கொண்டு இருந்திருக்கிறான். விளைவு? எந்தப் பாவமும் அறியாத ஒரு பெண்ணின் வாழ்க்கை பலியானது. மறுதலையாக அந்த வாலிபன் ஒருவகை மன நோய்க்கு ஆளாகியிருக்கிறான் என்றும் கூறலாம்.

இத்தகைய சம்பவங்கள் மிக அரிதானமைதான். ஆனால் தமது குடும்பப் பிரச்சனைகளை வளரும் குழந்தைகளின் முன் அலசுவதில் எதிர்விளைவுகள் உள்ளன எனபதை இச்சம்பவம் நமக்கு உணர்த்துகிறதல்லவா? ஆகவே, நமது குழந்தைகளுக்கு எதை வழங்க வேண்டும் , எதை வழங்கக் கூடாது என்பதில் நாம் ஆழ்ந்த கவனம் செலுத்துவோம்.

நன்றி : விடியல் வெள்ளி

0 விமர்சனங்கள்:

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010