புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

பரமகுடியில் நடந்தது என்ன உண்மை அறியும் குழுவின் நேரடி அறிக்கை

24 செப்டம்பர், 2011




பரமக்குடி துப்பாக்கி சூட்டில் ஆறு தலித்கள் சமீபத்தில் கொல்லப்பட்டனர். பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்திய இச்செய்தி பற்றி பல்வேறு தரப்பினர் பலவாறு தங்களுக்கு சாதகமான முறையில் திரித்து வெளியிட்ட நிலையில் செய்தியின் உண்மை நிலவரம் என்ன என்பதை வழக்கறிஞர்கள் எழுத்தாளர்கள் கவிஞர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் அடங்கிய உண்மை அறியும் குழு நேரிடையாக சென்று பல்வேறு தரப்பினரின் வாதங்களையும் ஆதாரங்களையும் ஒப்பிட்டு அதன் மூல காரணத்தை சரியாக கணித்து வரும் காலங்களில் இத்தகைய அசம்பாவிதங்களை தவிர்பதற்காக அரசாங்கத்திற்கு ஒரு சில பரிந்துரைகளை முன்வைத்துள்ளனர்.









உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கையின் விபரம்வருமாறு:





கடந்த செப்டம்பர் 11, 2011 அன்று பரமக்குடி ஐந்து முக்குச்சாலையில் தமிழக காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் தடியடியில் 6 தலித்கள் கொல்லப்பட்டும், சுமார் 30ற்கும் மேற்பட்டோர் படுகாயமுற்றும் உள்ளதை பல்வேறு அரசியல் கட்சிகளும், மனித உரிமை அமைப்பினரும் கண்டித்துள்ளனர். இது தொடர்பாக பல்வேறு மாநிலங்களையும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள் கொண்ட உண்மை அறியும் குழு ஒன்று கீழ்கண்டவாறு அமைக்கப்பட்டது.



உறுப்பினர்கள் :



1. பேராசிரியர் . மார்க்ஸ் - மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம், சென்னை

2. கோ. சுகுமாரன் - மக்கள் உரிமை கூட்டமைப்பு, புதுச்சேரி

3. வழக்கறிஞர் . முஹம்மது யூசுஃப் என்.சி.ஹெச்.ஆர்., தமிழ் நாடு

4. பேராசிரியர் ஜி.கே ராமசாமி - மக்கள் ஜனநாயக மன்றம், கர்நாடகா

5. வழக்கறிஞர் கார்த்திக் நவயான் - தேசிய தலித் முன்னனி, ஹைதராபாத்

6. ரெனி அய்லின், கேரளா - தேசிய ஒருங்கினைப்பாளர், என்.சி.ஹெச்.ஆர்.

7. பேரா பா. கல்வி மணி - மக்கள் கல்வி இயக்கம், திண்டிவனம்

8. வழக்கறிஞர் ரஜினி - மதுரை

9. பி.எஸ். ஹமீது - எஸ்.டி.பி., தமிழ் நாடு

11. செய்யது ஹாலித் - பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, இராமநாதபுரம்

12. மு. சிவகுருநாதன் - திருவாரூர்

13. கவிஞர் குட்டி ரேவதி - ஆவணப்பட இயக்குநர், சென்னை

14. முனைவர் பரமேஸ்வரி - கவிஞர், காஞ்சிபுரம்

15. கு. பழனிச்சாமி - மதுரை

16. வழக்கறிஞர் முஹம்மது சுஹைப் ஷரீஃப் - என்.சி.ஹெச்.ஆர்., கர்நாடகா

17. வழக்கறிஞர், தய், கந்தசாமி - திருத்துறைபூண்டி

18. தகட்டூர் ரவி - கல்பாக்கம்



இக்குழு செப்டம்பர் 19,20 ஆகிய தேதிகளில் பரமக்குடி சுற்றுவட்ட கிராமங்கள், இராமநாதபுரம், மதுரை ஆகிய பகுதிகளூக்குச் சென்று சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களையும், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருப்பவர்களையும், அரசு அதிகாரிகளையும், பொதுமக்களையும் சந்தித்து, விரிவாக அவர்களிடம் பேசி கருத்துக்களையும், ஒலி - ஒளி நாடாக்களில் பதிவு செய்து கொண்டது. முதல் தகவல் அறிக்கைகள், காவலில் வைக்கப்பட்டோருடைய விவரங்கள் ஆகியவற்றையும் தொகுத்துக்கொண்டது.



பின்னனி:



பரமக்குடி, கமுதி, இராமநாதபுரம், முதலானவை சாதி முரண்பாடுகள் கூர்மையடைந்துள்ள பகுதிகள், கடந்த 50 ஆண்டுகளாகவே இங்கு பல கலவரங்கள் நடைபெற்று வருகின்றன. 1957ல் நடைபெற்ற முதுகளத்தூர் கலவரம் அனைவரும் அறிந்த ஒன்றும். அப்போது கொலை செய்யப்பட்ட இம்மானுவேல் சேகரன் அப்பகுதி தேவேந்திர குல வேளாளர்களின் வணக்கத்திற்குரிய பெருந்தலைவராக உருப்பெற்றுள்ளார். பசும்பொன் முத்துராமலிங்கதேவர் எப்படி ஒரு திருவுருவாக உருப்பெற்றாரோ அதே வடிவில் தேவேந்திரர்களுக்கு இம்மானுவேல் சேகரன் உருவாகியுள்ளார்..



முத்துராமலிங்கத் தேவருடைய குருபூஜை அவர்களது சமூகத்தவர்களால் அவரது பிறந்த நாளை பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. தெய்வத்திருமகன் என அவர் வழிபடப்படுகிறார்.



இப்பகுதியில் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க பல்வேறு கிராமங்களில் வசிக்கின்ற தேந்திரர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கல்வி முதலிய வளர்ச்சிகள் விளைவாக இம்மானுவேல் சேகரனின் காலம் தொடங்கி அமைப்பு ரீதியாக இவர்கள் ஒருங்கு திரள்வதும், ஒடுக்குமுறையை ஏற்காத மனநிலையும், தங்களது அடையாளத்தை உறுதி செய்து கொள்ளும் சுயமரியாதை போக்கும், அதற்குரிய வகையில் வரலாறு உருவாக்கமும் நடைபெற்று படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனை இதுகாறும் ஆதிக்கம் செய்து வந்த பிரிவினரும், அரசு எந்திரமும் சகித்துக்கொள்ளாத நிலையின் விளைவாக சமூக முரண்கள் கூர்மையடைகின்றன.



ஓண்டி வீரன் என்கிற அருந்ததியர் இனத்து விடுதலை போராளியை பூலித்தேவன் என்கிற மன்னருக்கு சமமான மன்னராக வரலாறு எழுதுவதை தடுக்க வேண்டுமென நடராசன் (சசிகலா) முதலானோர் கூறி வருவது இத்துடன் இணைத்துப் பார்க்கத்தக்கது.



கல்வி மற்றும் ஜனநாயக உணர்வுகளின் வளர்ச்சியின் ஊடாக மேலெழும் அடித்தள மக்களின் அடையால உறுதிப்பாட்டை ஆதிக்க சமூகமும், ஆதிக்க சமூகத்தின் மனநிலையை பிரதிபலிக்கும் அரசும் ஏற்காததன் உச்சகட்ட வெளிப்பாடாகவே இந்த துப்பாக்கிச் சூடு அமைந்துள்ளது.



1987 முதல் தியாகி இம்மானுவேல் பேரவை என்கிற அமைப்பு இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளை (செப்டம்பர் 11) கொண்டாடத் தொடங்குகிறது. ஆண்டுக்காண்டு கூடுகின்ற கூட்டத்தின் அளவும் அதிகரிக்கிறது. 1995-97ல் தென்மாவட்ட சாதிக்கலவரங்கள் ஏற்படுகின்றன. புதிய தமிழகம் கட்சியும் இங்கே வேர் பதித்து செயல்படத் தொடங்குகிறது. இப்பகுதியில் தேவேந்திரர்களின் முக்கியத் தலைவர்களாக ஜான் பாண்டியன் முதலானோர் உருப்பெருகின்றனர்.





இதே காலகட்டத்தில் தேவர் குருபூஜை அரசே பங்கேற்று நடத்தக்கூடிய விழாவாக மாறுகிறது. 2007ல் தேவருடைய மறைவின் 50வது நினைவு நாளை ஒட்டி அவரது நினைவிடத்திற்கு அருகில் வசித்துக்கொண்டிருந்த சுமார் 100 தேவேந்திரர்களின் குடும்பங்கள் அங்கிருந்து அகற்றப்பட்டன. அரசே முன்னின்று இதைச் செய்தது.



இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளும் இதேபோல பெரிய அளவில் கொண்டாடப்படுவதை ஆதிக்க மனங்கள் ஏற்க மறுத்தன. தங்களைப் போலவே தேவேந்திர குலத்தினரும் இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளை குருபூஜை என அழைப்பதையும் அவர்கள் ஏற்கவில்லை. 2007ல் தொடங்கி ஆக்ஸ்ட், செப்டம்பர், அக்டோபர் ஆகிய மாதங்களில் ஏதேனும் ஒரு வன்முறையை தேந்திரர்கள் மீது ஏவும் போக்கு நடந்துள்ளது. 2007ல் வின்சென்ட் என்பவரும் 2009ல் அறிவழகன் என்பவரும், சென்ற ஆண்டு ஆகஸ்ட் 30 அன்று "குரு பூஜைக்கு அணி திரள்வீர்! என சுவரெழுத்துக்கள் எழுதிய கொந்தகை அரிகிருஷ்ணனும் ஆதிக்கச் சாதியினரால் கொலை செய்யப்பட்டனர்.



இந்த ஆண்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் தேவேந்திரர்களின் கட்சியாக அடையாளம் காணப்பட்டுள்ள புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த இருவர் சட்டமன்றத்திற்கு தேந்தெடுக்கப்பட்டுள்ளனர். நீண்ட நாள் சிறையிலிருந்த ஜான் பாண்டியனும் விடுதலையடைந்தனர். இவையெல்லாம் தேவேந்திரர்கள் மத்தியில் ஒரு எழுச்சியை வேறெப்போவதைக் காட்டினும் அதிகமாக ஏற்படுத்தியுள்ளது. சென்ற ஆண்டு 2010 இம்மானுவேல் சேகரினின் குருபூஜையில் பங்கேற்ற அதிமுக தலைவர் நயினார் நாகேந்திரன் தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளை அரசு விழாவாக நடத்துவோம் என அறிவித்ததும், 2010 அக்டோபர் 9 அன்று இம்மானுவேல் சேகரனின் உருவம் பொறித்த தபால் தலை வெளியிடப்பட்டதும், தேவேந்திரர்கள் மத்தியில் மிகுந்த எழுச்சியையும் நிறைந்த எதிர்ப்பார்புகளையும் ஏற்படுத்தியிருந்தது. ஆதிக்க சாதியினர் இதை மிகவும் வெறுப்புடன் பார்து வந்தனர். ஆப்ப நாடு மறவர் சங்கம் வெளியிட்டுள்ள ஒரு சுற்றறிக்கையில் இவ்வாறு இம்மானுவேல் சேகரனின் குருபூஜை முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜைக்குச் சமமாக மேலேழுந்து வருவதைத் தடுக்க வேண்டுமென கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பின்னனியில் தான் செபடம்பர் 9ம் தேதியன்று கமுதிக்கு அருகில் மண்டல மாணிக்கம் கிராமத்திற்கு அருகில் உள்ள பள்ளப்பச்சேரி எனும் தலித் கிராமத்தைச் சேர்ந்த பழனிக்குமார் என்கிற 16 வயது தேவேந்திரர் குலச் சிறுவன் கொடுமையாக வெட்டிக் கொல்லப்பட்டான். இது தொடர்பாக தேவர் சாதியைச் சேர்ந்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொல்லப்பட்ட சிறுவனுக்கு அஞ்சலி செலுத்த வந்த ஜான் பாண்டியன் தடுக்கப்பட்டு திருப்பியனுப்பப்பட்டார். இதே நேரத்தில் செப்டம்பர் 7 அன்று அரசுப் போக்குவரத்து கழக பட்டியல் சாதி தொழிற்சங்கத்தினர் "தேசிய தலைவர் தெய்வத்  திருமகனார்" என இம்மானுவேல் சேகரனை விவரித்து, பிளக்ஸ் போர்டு ஒன்றை பரமக்குடி நகரத்தில் வைத்தனர். உடனடியாக இதனை எதிர்த்து மறத்தமிழர் சேனை என்கிற அமைப்பும் தேவர் சாதியைச் சேர்ந்த வழக்கறிஞர்களும் காவல்துறை மற்றூம் வருவாய்துறையினருக்கு அழுத்தம் கொடுத்தனர்.



தெய்வத்திருமகனார் என்ற பெயரை தேவருக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்; இம்மானுவேல் சேகரனுக்கு பயன்படுத்தக்கூடாது என்று அவர்கள் கூறினர். இது பட்டியல் சாதியினரின் சட்டப்பூர்வமான உரிமை என்று கூறி பாதுகாப்பளித்திருக்க வேண்டிய ரெவின்யூ நிர்வாகமும், காவல்துறையும் பட்டியல் சாதி அமைப்பினரை வரவழைத்து, அந்த ஃபிளக்ஸ் போர்டினுள்ள் இவ்வார்த்தைகளை நீக்க வேண்டுமென வற்புறுத்தினர். அவர்களும் பணிந்து அச்சொற்களை நீக்கவும் செய்தனர். இது தேவேந்திரர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தவே தெய்வத் திருமகனார் என இம்மானுவேல் சேகரனை விவரித்து பல பிளக்ஸ் போர்டுகளை ஆங்காங்கு மறு நாள் அவர்கள் வைத்துள்ளனர். இதைக் கண்டு ஆதிக்க சாதியினர் மட்டுமல்ல, காவல்துறையும் அரசு நிர்வாகமும் சேர்ந்து ஆத்திரமடைந்தது. பரமக்குடியிலுள்ள எந்த பிளக்ஸ் போர்டு அச்சகமும் இது போன்ற பிளக்ஸ் போர்டுகளை அச்சிடக்கூடாதென தடுத்தன.



இந்த பின்னனியில் தான் செப்டம்பர் 11 அன்ரு இம்மானுவேல் சேகரன் நினைவு நாளில் அவரது சமாதிக்கு அஞ்சலி செலுத்த வந்த மக்களுக்கும் காவல்துறைக்கும் இடையில் முரண்பாடு எழுந்தது, துப்பாக்கிச் சூட்டில் 6 உயிர்கள் பலியாகவும், ஏராளமானோர் படுகாயமடையவும் நேரிட்டது.



மேலும் முழு விவரங்களை அறிய கீழே இணைத்துள்ள கோப்பை திறந்து படிக்கவும்




0 விமர்சனங்கள்:

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010