1. முஸ்லிம்களின் இடஒதுக்கீடு:
மத்தியில் இடஒதுக்கீடு: ஒரு சமூகம் முன்னேறுவதற்கு அரசின் கல்வி, வேலைவாய்ப்புகளில் உரிய இடஒதுக்கீடு அவசியம், இதை உணர்ந்துதான் நமது அரசியல் சாசன சட்டத்தை வகுத்த விற்பன்னர்கள் இதற்கான வழிமுறைகளை அடிப்படை உரிமைகளுள் ஒன்றாக வரைந்துள்ளனர். இப்படிப்பட்ட நிலையில் இடஒதுக்கீடு என்பது சமூக நீதி என்ற அடிப்படையிலேயே பார்க்கப்படுகின்றது. சிறுபானமியினரின் வாழ்வு நிலை குறித்து ஆராய மத்திய அரசால் நியமிக்கப்பட்ட நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் முஸ்லிம்களுக்கு மத்திய அரசின் கல்வி, வேலைவாய்ப்புகளில் 10% இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென்று பரிந்துரைத்துள்ளது.
முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை தேர்தல் கால தந்திரமாகவே காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் பயன்படுத்தி வருவதாக இது நாள் வரையிலான அவர்களின் நடவடிக்கைகள் காட்டுகின்றன. இதனை விடுத்து உண்மையிலேயே சமூக நீதியை மலரச் செய்ய முஸ்லிம்களுக்கு மத்திய அரசு 10% இடஒதுக்கீட்டை காலதாமதப்படுத்தாமல் வழங்கிட வேண்டும் என பொதுக்குழு மத்திய அரசை கேட்டுக்கொள்கிறது.
மாநில இடஒதுக்கீடு: தமிழகத்தில் தற்போது நடைமுறையிலுள்ள முஸ்லிம்களுக்கான 3.5% இடஒதுக்கீட்டை ஆதரிப்பதாக தமிழக முதல்வர் தனது தேர்தல் பிரச்சாரத்தில் வாக்குறுதியாக வழங்கியதை இந்த நேரத்தில் இப்பொதுக்குழு தமிழக முதல்வருக்கு நினைவூட்டுகிறது. அதனடிப்படையில் தமிழகத்தில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை 7% உயர்த்தி ஆணை பிறப்பிக்க வேண்டுமென தமிழக முதல்வரை இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.
மேலும் இந்த இடஒதுக்கீட்டு கோரிக்கையை வலியுறுத்தி வருகின்ற ஏப்ரல் 22 அன்று தமிழகம் தழுவிய அளவில் சென்னை, கோவை, மதுரை, தஞ்சை, நெல்லை ஆகிய இடங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்தவிருக்கும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தை வெற்றி பெறச்செய்யுமாறும், ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும், மாணவச் சமூகத்தையும் உலமாப்பெருமக்களையும் இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.
2. பொது மன்னிப்பில் சிறைவாசிகள் விடுதலை:
வருகின்ற பிப்ரவரி 24 அன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு, 7 ஆண்டுகள் கழிந்த ஆயுள் சிறைவாசிகளை பொதுமன்னிப்பில் விடுதலை செய்ய வேண்டுமென்றும், முஸ்லிம் சிறைவாசிகளை அந்த பொதுமன்னிப்பில் உள்ளடக்க வேண்டுமென்றும் தமிழக முதல்வரை இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.
கடந்த 1992 அன்று ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு பொறுப்பேற்றதை கொண்டாடும் விதமாக பிப்ரவரி 24 அன்று பொதுமன்னிப்பில் சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட்டனர். அதே போல் முதல்வரின் பிறந்த தினத்தை முன்னிட்டு, 1993, 94 ஆகிய வருடங்களில் சிறைவாசிகள் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டனர். 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 அண்ணா பிறந்த தினத்தை முன்னிட்டு அப்போதையை அதிமுக அரசின் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் பொதுமன்னிப்பில் சிறைவாசிகளை விடுவித்தார். பொதுமன்னிப்பில் சிறைவாசிகளை விடுதலை செய்வது என்பது அதிமுக அரசின் கொள்கைக்கு விரோதமான ஒன்றல்ல என்பதையும், இப்பொதுக்குழு சுட்டிக்காட்டுகிறது.
3. வன்முறையை தூண்டும் திரைப்படங்கள்:
சமீபத்தில் சென்னையில் பள்ளி மாணவன் ஒருவனால் ஆசிரியை குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட ஆசிரியையின் குடும்பத்திற்கு இப்பொதுக்குழு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறது. அவருடைய குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென தமிழக அரசை இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.
கொலை செய்த மாணவன் திரைப்படத்தை பார்த்துதான் இச்செயலை செய்ததாக கூறியுள்ளான். இன்று சமூகத்தில் காணப்படும் கலாச்சார சீரழிவுகள், மாணவர்கள், இளையதலைமுறையினரின் எதிர்காலத்தை சூன்யமாக்கும் காட்சிகள் , குடும்ப உறவுகளில் விரிசல், ஆபாசம் என திரைப்படங்கள் இன்று சமூகத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. இதுமட்டுமல்லாது தொலைக்காட்சி தொடர்களும் சமூக கட்டமைப்பை சீர்குலைத்து வருகின்றது. எனவே இது விசயத்தில் அரசு உறுதியான நடவடிக்கை மேற்கொண்டு இதுபோன்ற திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களை கடுமையான தணிக்கைக்கு உட்படுத்தி தேவைப்படும் பட்சத்தில் அவற்றை தடை செய்யுவும் தயங்கக்கூடாது என இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.
4. அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள்:
நாட்டில் நடக்கும் பல்வேறு குண்டுவெடிப்புகளுக்கு முஸ்லிம்கள்தான் காரணமாக இருக்க முடியும் என்ற ஒரு மனநிலை காவல்துறை மற்றும் உளவுத்துறையில் நிலவுவதை காண முடிகிறது. பலமுறை அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் தீவிரவாத பழி சுமத்தப்பட்டு பல வருடங்கள் சிறையில் கழித்து பின்னர் நிரபராதிகள் என்று கண்டறியப்பட்டுள்ளனர். இத்தகைய முஸ்லிம் இளைஞர்கள் விசாரணையின் போதும் சிறைவாழ்க்கையிலும் கடுமையான சித்திரவதைகளுக்கு மட்டுமல்லாமல் அவர்களும் அவர்களது குடும்பத்தினரும் சமூகத்தில் தனிமைப்படுத்தக்கூடிய நிலையும் உள்ளது. உளவுத்துறையின் இந்த ஒரு சார்பு நிலை மாற்றப்பட வேண்டும். போலி எண்கவுண்டர்களாலும் பல அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். எனவே காவல்துறை மற்றும் உளவுத்துறை மறு சீரமைப்பு செய்வது காலத்தின் கட்டாயம் என்று இப்பொதுக்குழு கருதுகிறது. தற்போது ஆமிர் என்ற முஸ்லிம் இளைஞர் பல்வேறு குண்டுவெடிப்புகளில் குற்றம் சுமத்தப்பட்டு 14 வருடங்கள் சிறையில் கழித்த பின்னர் நிரபராதி என்று கண்டறியப்பட்டுள்ளார்.
இதே போன்று பல முஸ்லிம் இளைஞர்கள் பல்வேறு குண்டுவெடிப்பு வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். ஒரு புறம் பல வருடங்களுக்கு பின்னர் நிரபராதிகள் என்று முஸ்லிம்கள் விடுதலை செய்யப்படுவதும் மறுபுறம் மீண்டும் பல குண்டுவெடிப்புகளில் முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்படுவதும் தொடர் கதையாகி வருகிறது. எனவே இத்தருணத்தில் 1992லிருந்து நடந்த அனைத்து குண்டுவெடிப்புகளையும் நீதிபதிகள், பத்திரிக்கையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் உள்ளடக்கிய தனி குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்டின் இப்பொதுக்குழு மத்திய அரசை மீண்டும் வலியுறுத்துகிறது.
5. இஸ்ரேலிய சதி:
கடந்த சில தினங்களுக்கு முன் கேரள மாநிலம் கொச்சியில் சந்தேகத்திற்கிடமான இரண்டு இஸ்ரேலிய பிரஜைகள், கைது செய்யப்பட்டார்கள். அயல் நாட்டு உளவாளிகள் இந்தியாவில் அவ்வப்போது ஊடுறுவதாகவும், அதன் பிறகு ஆங்காங்கே குண்டுகள் வெடிப்பது தொடர் கதையாகி வருகின்றது. மும்பை தாக்குதலின் சூத்திரதாரி என கருதப்படும் அமெரிக்க பிரஜையான டேவிட் கால்மென் ஹெட்லியின் நிலை பற்றி யாருக்கும் தெரியவில்லை. இந்நிலையில் சமீபத்தில் கைது செய்யப்பட்டுள்ள இஸ்ரேலிய பிரஜைகளின் நடவடிக்கைகளூம் அவர்கள் சந்தித்த நபர்கள் குறித்தும், அவர்களின் சதி திட்டங்கள் பற்றியும் ஓர் மர்மம் நிலவுகின்றது. மேலும் இந்தியாவில் இவர்கள் இரண்டு பேர் மட்டும்தான் செயல்படுகிறார்களா? இன்னும் எத்தனையோ இந்தியா முழுக்க பரவியிருந்து நாட்டிற்கு எதிராக சதி செய்து வருகின்றார்கள் என்பது குறித்தும் உளவுத்துறை மவுனம் சாதிக்கின்றது.
இஸ்ரேலிய உளவு நிறுவனங்கள் இப்படி செயல்படுவது தெரிந்தும் மத்திய அரசு இஸ்ரேலுடன் வெளியுறவு மற்றும் வர்த்தக தொடர்புகளை தொடர்ந்து பலப்படுத்தி வருவது மிகுந்த அதிர்ச்சியளிக்கக்கூடியதாக இருக்கிறது. இது விசயத்தில் மத்திய அரசு இனியும் மெத்தனப்போக்கை கடைபிடிக்காமல் இஸ்ரேலுடனான தொடர்புகள் அனைத்தையும் துண்டிப்பதுடன் நாட்டில் இருக்கும் இஸ்ரேலிய பிரஜைகள் மீது கண்காணிப்பை தீவிரப்படுத்தி உளவு மற்றும் நாசவேலைகளில் ஈடுபட திட்டமிட்டுள்ளவர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பொதுக்குழு மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கின்றது.
6. மின்வெட்டு:
தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு கடந்த 8 மாதங்களாக நிலவி வரும் மின்வெட்டும், தற்போது நிலவி வரும் தினசரி 8 மணி நேர மின்வெட்டும், இது அல்லாது அறிவிக்கப்படாத பல மணி நேர மின்வெட்டும் மக்களின் இயல்பு வாழ்க்கையை கடும் பாதிப்பிற்குள்ளாக்கியுள்ளது. முழு ஆண்டுத் தெர்வு நெருங்கி வரும் வேலையில் இரவு நேர மின்வெட்டால் பாடங்களை படிக்க முடியாமல் மாணவ, மாணவியர் கடும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். மேலும் மின்வெட்டால் இரவில் தூக்கமின்றி அவதிப்படும் மாணவ, மாணவியர் மறு நாள் கல்விக்கூடங்களில் பாடங்களை கவனிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். பகலில் பள்ளியில் நிகழும் மின்வெட்டால் ஆய்வுக்கூடங்களில் செயல்முறைத் தேர்வும் எழுத முடியாத நிலை ஏற்படுகிறது. தொழிற் நிறுவனங்களும், வியாபார நிறுவனங்களும் மின்வெட்டின் பாதிப்பிலிருந்து தப்பவில்லை. இந்நிலையில் மின்வெட்டை நீக்கவும், சீரான மின் விநியோகத்திற்கும் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு உடனடியாக அதனை சரி செய்ய வேண்டுமென்று இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.
7. சங்கரன்கோவில் கலவரம்:
நெல்லை மாவட்டம் மேற்கு பகுதியில் கலவரத்தை ஏற்படுத்த ஃபாசிஸ்டுகள் அவ்வப்போது முயன்று வருவதும், கடந்த காலங்களில் தென்காசியில் முஸ்லிம்கள் போன்று போலி தாடி, தொப்பி வைத்து குண்டு வைத்து கலவரம் ஏற்படுத்த முயன்றதும் குறிப்பிடத்தக்கது.
எனவே தான் சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வரும் தலித் - முஸ்லிம்கள் மத்தியில் பகையை ஏற்படுத்தி கலவரத்தை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளனரோ என்ற சந்தேகம் வலுவாக ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு மற்றும் காவல்துறை இது விஷயத்தில் அதீத சிரத்தை எடுத்து கலவரக்காரர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநிலத் தலை ஏ.எஸ் இஸ்மாயில் தமிழக முதல்வர் அவர்களை கேட்டுக்கொண்டார்.
மேலும் தலித்கள் மற்றும் தலித் இளைஞர்கள் ஃபாசிஸ்டுகளின் வஞ்சக எண்ணத்திற்கு பலியாகி விடக்கூடாது என்றும், இது விஷயத்தில் கவனம் செலுத்தி முஸ்லிம் - தலித் ஒற்றுமையை பலப்படுத்த முஸ்லிம் மற்றும் தலித் தலைவர்கள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் பாப்புலர் ஃப்ரண்டின் மாநில தலைவர் ஏ.எஸ் இஸ்மாயில் கேட்டுக்கொண்டதுடன் கலவரத்தில் பாதிக்கப்பட்டோருக்கு தகுந்த இழப்பீடு வழங்க வழிவகை செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசை இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.
1 விமர்சனங்கள்:
Mashaallah, very good, appreciation to PFI-TamilNadu, good agenda's by the SGA.
கருத்துரையிடுக