புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

சென்னையில் மனித சங்கிலி போராட்டம்

17 செப்டம்பர், 2012

அப்பாவி சிறைவாசிகளை பிணையில் விடுவிக்க கோரி "சட்டப்படி பிணையில் விடு, அப்பாவிகளை விடுதலை செய்!" என்ற முழக்கத்தை முன்வைத்து கடந்த 15.08.2012 முதல் 15.09.2012 வரை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசிய அளவிலான பிரச்சாரத்தை நடத்தி வந்தது. அதன் நிறைவாக டெல்லி (ஜந்தர் மந்தர்) மற்றும் தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் 100ற்கும் மேற்பட்ட இடங்களில் இக்கோரிக்கையை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டத்தை 15.09.2012 அன்று ஒரே நேரத்தில் நடத்தியது.


சென்னையில் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில நிர்வாகிகள் உட்பட பலரும் கலந்து கொண்டு நீதிக்கான போராட்டத்தில் தங்களின் கைகளுக் துணை நிற்கும் என்பதை உறுதி செய்தனர்.

இந்த நாட்டில் உள்ள சட்டங்களின் படி, நீதிமன்றங்களில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு தண்டனை கொடுக்கப் பட்டவர்களுக்குத்தான் சிறைச்சாலையாகும். நீதியான விசாரணை நடத்தப்பட்டு ஒருவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட வேண்டும். அவ்வாறு குற்றவாளி என நிரூபிக்கப்படும் வரை அவர் அப்பாவி என்பது தான் அடிப்படை சட்டமாகும். இதன் அடிப்படையில் குற்றம் சுமத்தப்பட்டவர் அல்லது பல்வேறு குற்றங்களில் தொடர்பு படுத்தப்பட்டு விசாரணையை சந்தித்து வருபவர் அப்பாவி என்றே கருதப்பட வேண்டும்.


நீதிமன்றம் அவரை குற்றவாளி என்று கூறி சிறைத்தண்டனை விதிக்கும் வரை அவர் அப்பாவி தான். எந்த காரணமும் இல்லாமல் ஒரு அப்பாவி கூட சிறையில் இருக்கக்கூடாது. இந்த அடிப்படையில் தான் இந்திய சட்டம் விரிந்து பரந்த பார்வையுடன் பல்வேறு குற்றங்களில் கைது செய்யப்பட்டவர்களுக்கு பிணை என்பதை விதியாக்கியிருக்கிறது.

கண்ணியத்திற்குரிய நமது உச்ச நீதிமன்றத்தின் ஒரு புகழ் பெற்ற தீர்ப்பு இப்படி கூறுகின்றது:
"பிணை என்பது சட்டமாகும், சிறை என்பது விதிவிலக்காகும்" ஆனால் சில ஆண்டுகளாக தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் விசாரணை கைதிகளுக்கு பிணை கொடுப்பது மறுக்கப்பட்டு வருகின்றது.

தடா, பொடா போன்ற கருப்பு சட்டங்களை திரும்ப பெற்றவுடன் பாராளுமன்றம் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் என்ற யு.ஏ.பி.ஏ என்ற சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வந்து பிணை வழங்குவதற்கு தடை ஏற்படுத்தி விசாரணை கைதிகள் முடிவில்லாமல் சிறையில் வாடும் நிலை ஏற்பட்டுள்ளது. நிர்க்கதியான ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இவ்வாறு சிறைகளில் வாடி வருகின்றனர்.

இப்படி இருப்பவர்களில் பெரும்பாலானோர் ஒடுக்கப்பட்ட பிரிவினரான தலித்கள், ஆதிவாசிகள் மற்றும் முஸ்லிம்கள் ஆவர். பல வழக்குகளில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஏனென்றால் அரசு தரப்பு அவர்களில் மீது சுமத்திய குற்றத்தை நிரூபிக்க முடியவில்லை. ஆனால் இதனிடையே அவர்களின் இளமைக்காலம் முழுவதும் சிறைக் கம்பிகளின் பின்னால் கழிந்திருக்கும்.

இது போன்ற ஒரு வன்முறையை ஒரு ஜனநாயக அரசு எப்படி அனுமதிக்க முடியும்? இது போன்ற ஒரு அநீதியை பார்த்து ஒரு நாகரீகமான சமூகம் எப்படி அமைதியாக இருக்க முடியும்? எனவே, அனைத்து குடிமக்களும் ஒன்று சேர்வோம் நீதிக்காக குரல் கொடுப்போம்! என்றதுடன் போராட்டத்தின் இறுதியில் அப்பாவிகளை விடுதலைக்கான போராட்டத்தில் தோள் கொடுப்போம் என்று உறுதி  மொழியும் எடுக்கப்பட்டது.

மேற்கூறப்பட்ட கோரிக்கையை வலியுறுத்தி பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய தலைவர் இ.எம். அப்துர்ரஹ்மான் அவர்கள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களிடம் மனு ஒன்றையும் சமர்பித்துள்ளார். அதே போல் தமிழகத்திலும் இக்கோரிக்கையை மனுவை தமிழக முதல்வரிடம் கொடுப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தின் இறுதியில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது:

1. விசாரணைக்கைதிகளை ஜாமீனில் விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

2. அப்பாவிகளை விசாரணைக் கைதிகளாகவே நீண்ட காலம் சிறையில் அடைத்து வைத்திருப்பதை நியாயப்படுத்தும் வகையில் தற்போது அதிகாரிகளுக்கும், விசாரணை ஏஜென்சிகளுக்கும் (காவல்துறை) வரம்பற்ற அதிகாரத்தை வழங்கும் யு.ஏ.பி.ஏ போன்ற அனைத்து கருப்புச்சட்டங்களையும் அரசு ரத்து செய்ய வேண்டும்.

3. பொய் வழக்கு புனையும் அதிகாரிகளை தண்டிக்கும் வகையிலும், நிரபராதி என விடுதலை செய்யப்பட்ட அப்பாவிகளுக்கு தகுந்த இழப்பீடு கிடைக்கும் வகையிலும் தேவையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.

4. ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 7 ஆண்டுகளுக்கு மேலாக சிறைகளில் வாடிக்கொண்டிருக்கும் ஆயுள் சிறைவாசிகளை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும்.





0 விமர்சனங்கள்:

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010