புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

முதலமைச்சருடனான சந்திப்பு

30 நவம்பர், 2012

சமீபத்தில் வெளியான துப்பாக்கி திரைப்படம் முஸ்லிம் சமுதாயத்தை தீவிரவாதிகளாக சித்தரித்து எடுக்கப்பட்டிருந்ததால் மிகப் பெரிய கவலையும் கோபமும் ஏற்பட்டது . இவ்வேளையில் முஸ்லிம் இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு மிகுந்த பொறுப்புணர்வோடு இப்பிரச்சினையை அனுகியதோடு தாங்களும் உரிய வகையில் தகுந்த நடவடிக்கைகள் எடுத்ததின் விளைவாக அப்படக் குழுவினர் கூட்டமைப்பு நிர்வாகிகளோடு சந்தித்து சர்ச்சைக்குரிய காட்சிகள் சிலவற்றை எடுக்க சம்மதித்தனர் . எனவே தங்களின் நியாய உணர்வுடன் கூடிய நடவடிக்கைகளுக்கு ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்தின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் .

முஸ்லிம் சமுதாயத்தின் மீது அக்கறையுடன் செயல்படும் தங்களிடம் எம் சமுதாயத்தின் நீண்ட கால கோரிக்கைகள் சிலவற்றை இங்கே சமர்ப்பிக்கின்றோம் .இந்த ஜீவாதார கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றித் தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் .

கோரிக்கைகள் :

1. பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டு வரும் 3.5% இட ஒதுக்கீட்டில் உள்ள குளறுபடிகளை நீக்குவதோடு முஸ்லிம் சமுதாய மக்களின் நலனை கருத்தில் கொண்டு இட ஒதுக்கீட்டின் அளவை உயர்த்தித் தருமாறு கேட்டுக் கொள்கிறோம் .

2. முஸ்லிம்கள் காலம் காலமாக தங்களின் திருமணங்களை அந்தந்த ஜமாஅத் பதிவேடுகளில் முறையாக பதிவு செய்து வருகின்றனர் . முஸ்லிம் தனியார் சட்டத்தின் அடிப்படையில் நடைபெறும் திருமணங்களை பள்ளிவாசல் முத்தவல்லி , இமாம் , காஜி ஆகியோர் பதிவு அலுவலர்களாக செயல்பட்டு பதிவு செய்யலாம் எனவும் தமிழ்நாடு திருமணங்கள் பதிவு செய்தல் சட்டம் 2009 விதி 5 உட்பிரிவு 4 லிருந்து இஸ்லாமிய சட்டத்தின் அடிப்படையில் நடைபெறும் திருமணத்திற்கு முற்றிலும் விதி விலக்கு அளித்து சான்று ஆவணங்கள் எதுவுமின்றி பதிவு 1 (அ) மட்டுமே அடிப்படையாக கொண்டு பதிவு செய்ய உரிய சட்ட திருத்தம் வழங்க வேண்டும் .

3. ஆக்கிரமிப்பில் உள்ள முஸ்லிம்களின் வக்பு நிலங்களை மீட்டு முஸ்லிம் சமூகம் பயன்பெறும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் .

(இந்த மூன்று கோரிக்கைகளும் தாங்கள் கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது வாக்களித்தவை என்பதை தங்களது மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.)

4. இந்திய அரசியல் சாசன சட்டம் வழங்கியுள்ள உரிமையின் அடிப்படையில் முஸ்லிம் தனியார் சட்டத்தின் நெறிமுறைப் படி முஸ்லிம்கள் திருமணம்,விவகாரத்து,பாகப்பிரிவினைப் போன்றவற்றை செய்து வருகின்றனர் . முஸ்லிம் தனியார் சட்டத்தின் நெறிமுறைப் படி தான் 18 வயதுக்கும் குறைவான வயது வந்த பெண்களுக்கு முதல் நிலைக் கருதி திருமணம் நடைபெறுகிறது . இது போன்ற சூழலில் குழந்தை திருமண ஒழிப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி கைது செய்வது தொடர்கிறது . இதனை தடுக்க உரிய ஆவண செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம் .

5. தமிழ்நாட்டில் உருதுவை தாய்மொழியாகக் கொண்டுள்ள முஸ்லிம்கள் கணிசமாக வாழ்கின்றார்கள் . கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வி முறையின் காரணமாக தம் தாய்மொழியை காக்கும் உரிமையை உருதுவை தாய்மொழியாக கொண்ட குழந்தைகள் இழந்து உள்ளனர் . புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மாணவர்களுக்கு மொழிப் பாடம் தொடர்பாக சமீபத்தில் தமிழக அரசு விதி விலக்கு அளித்தது போல் தமிழ்நாட்டில் சிறுபான்மை மாணவர்களுக்கு விதி விலக்கு அளித்து , அவர்கள் தொடக்க வகுப்பு முதல் +2 வரை உருது , அரபி , கன்னடம் , தெலுங்கு , மலையாளம் ஆகிய மொழிகளைப் படிப்பதற்கும் , அதில் தேர்வு எழுதி பெறும் மதிப்பெண்களை தேர்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கும் ஆவண செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம் .

6. தமிழ்நாட்டில் கிருஸ்துவத்தை தழுவும் தலித் மக்கள் பிற்படுத்தப்பட்ட கிருஸ்துவர்களாக கருதப்படுகின்றார்கள் . ஆனால் இஸ்லாத்தை தழுவும் தலித்துகளை பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களாக கருதுவதில்லை . இந்த நிலையை மாற்ற ஆவண செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம் .

7.கடந்த கால தங்களுடைய ஆட்சிக் காலத்தில் லாட்டரி , கந்து வட்டி போன்றவற்றை தடை செய்து ஒரு வரலாற்று சாதனை செய்தீர்கள் . அது போலவே தங்களின் ஆட்சியில் மது விலக்கை செயல்படுத்தி தமிழக தாய்மார்களின் மனங்குளிரச் செய்து மீண்டும் ஒரு வரலாற்று சாதனை செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம் .

8. தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேலாக ஆயுள் சிறைவாசிகளாக உள்ளவர்களை கருணை அடிப்படையில் விடுதலை செய்து அவர்களின் குடும்பத்தார் வாழ்வில் ஒளி ஏற்ற வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம் . குறிப்பாக 60 வயதுக்கும் மேற்பட்ட நிலையில் உள்ளவர்களின் நிலைமையை கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம் .

மேற்கண்ட எமது கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் .

இந்தச் சந்திப்பின்போது மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திரு. அ. முஹம்மத் ஜான், தலைமைச் செயலாளர் திரு.தேபேந்திரநாத் சாரங்கி, இ.ஆ.ப., தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு.மொகமது ஹனீபா, தமிழ்நாடு மாநில ஜமாத்துல் உலமா சபைத் தலைவர் திரு.அப்துல் ரஹ்மான் மிஸ்பாஹி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக பொதுச் செயலர் திரு.அப்துல் சமது, ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் பொதுச் செயலாளர் திரு.முஹம்மது அனிபா மன்பயி, பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா தலைவர் திரு.இஸ்மாயில், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் திரு.பாக்கர், சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா பொதுச் செயலாளர் திரு.அப்துல் ஹமீது, மனித நேய மக்கள் கட்சி தலைவர் திரு.ஜவாஹிருல்லா, தேசிய லீக் தலைவர் திரு.பஷீர் அஹ்மது, வெல்பேர் பார்ட்டி ஆஃப் இந்தியா தலைவர் திரு.சிக்கந்தர், இந்திய தேசிய லீக் பொதுச் செயலாளர் திரு.நிஜாம், மறுமலர்ச்சி முஸ்லீம் லீக் தலைவர் திரு.அச.உமர்பாரூக், தமிழ்நாடு முஸ்லீம் தொண்டு இயக்கம் தலைவர் திரு.முகம்மது மன்சூர், சுன்னத் ஜமாஅத் ஐக்கிய பேரவை தலைவர் திரு.மேலை நாஸர், இஸ்லாமிய விழிப்புணர்வுக் கழகம் பொதுச் செயலாளர் திரு.தர்வேஷ் ரஷாத், ஜம்மிபத்துல் உலமாயே ஹிந்த் (மஹ்மூத் மதனி) பொதுச் செயலர் திரு. ஆ.முஹம்மது மன்சூர், ஆல் இந்தியா மில் கவுன்சில் சார்பில் திரு.முனீர் மற்றும் ஐக்கிய சமாதானப் பேரவை பொதுச் செயலாளர் திரு.முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் உடனிருந்தனர்.

0 விமர்சனங்கள்:

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010