துபையில் புதுப் பொலிவுடன் நடைபெற்ற
Better Family! Better Society!!
இஸ்லாமிய சமூக நிகழ்ச்சி
Emirates India Fraternity Forum (EIFF) ஏற்பாடு செய்திருந்த Better Family! Better Society!! என்ற இஸ்லாமிய சமூக நிகழ்ச்சி கடந்த 10.06.11 வெள்ளியன்று அல் கிஸைஸில் புதுப் பொலிவுடன் நடைபெற்றது.
சரியாக மாலை 6 மணிக்கு நிகழ்ச்சி துவங்கியது. ஆரம்பமாக அருள்மறை வசனங்களை ஓதினார் சகோ. முஜீப் அவர்கள். அதன் பின்னர் சகோ. ஆஷிக் அவர்கள் அனைவரையும் வரவேற்று, அறிமுகவுரை ஆற்றினார். நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியவரும் அவரே.
பின்னர் “நம்மை நாமே புனரமைப்போம்” என்ற தலைப்பில் சகோ. வலசை ஃபைஸல் அவர்கள் உரை நிகழ்த்தினார். சமுதாயப் புனரமைப்புக்கு மூல காரணமாக விளங்குவது தன்னைத் தானே புனரமைப்பதுதான் என்று கூறிய அவர், சுய மாற்றத்திற்கான வழிவகைகளை அழகுற எடுத்துரைத்தார்.
சமுதாயப் புனரமைப்பின் அடுத்த காரணியாக விளங்கும் “குடும்பத்தைப் புனரமைப்போம்” என்ற தலைப்பில் சகோ. எம்.எஸ். அப்துல் ஹமீது அவர்கள் உரை நிகழ்த்தினார். குடும்பம் ஒரு பல்கலைக்கழகமாக மிளிர வேண்டுமெனில் அங்கே செய்யப்படவேண்டிய மாற்றங்கள் குறித்து குறிப்பிட்ட அவர், குழந்தை வளர்ப்பு குறித்து விரிவாக உரை நிகழ்த்தினார்.
இறுதியாக, நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக “சமுதாயத்தைப் புனரமைப்போம்” என்ற தலைப்பில் சகோ. அ. செய்யது அலீ அவர்கள் உரை நிகழ்த்தினார். முஸ்லிம் சமுதாயம் தொய்வுற்ற பொழுதெல்லாம் வரலாறு நெடுகிலும் அது புனர்நிர்மாணம் செய்யப்பட்டதை வரலாற்றுக் குறிப்புகளோடு நினைவுகூர்ந்தார் அவர். இன்றைய இந்திய முஸ்லிம்களின் நிலையைக் குறிப்பிட்ட அவர், சமுதாய மாற்றத்திற்கு முஸ்லிம்கள் செய்யவேண்டிய கடமைகளைப் பட்டியலிட்டார்.
ஒவ்வொரு உரை முடிந்தவுடன் கலந்துகொண்டவர்களுக்கு அந்த அந்தத் தலைப்பில் சுயபரிசோதனைக்கான படிவம் கொடுக்கப்பட்டது. கலந்துகொண்டவர்கள் அவைகளை நிரப்பி தங்களிடம் வைத்துக்கொண்டனர்.
முடிவில் சகோ. ஜெய்னுல் ஆபிதீன் அவர்கள் முடிவுரையாற்றினார். இங்கே கேட்டவைகளை நடைமுறையில் கொண்டு வந்தால் மட்டுமே சமதாயத்தைப் புனரமைக்க முடியும் என்று அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
இறுதியாக, கலந்துகொண்டவர்களிடம் கருத்துப் படிவம் கொடுக்கப்பட்டு, நிகழ்ச்சி குறித்த கருத்துகள் எழுதி வாங்கப்பட்டன.
மஃக்ரிப் இடைவேளையில் கலந்துகொண்டவர்களுக்கு தேநீரும், சிற்றுண்டியும் வழங்கப்பட்டன.
EIFFன் தன்னார்வத் தொண்டர்கள் ஆர்வமுடன் சேவை செய்து நிகழ்ச்சியைச் சிறப்பாக்கிட உதவினர்.
0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக