புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

அஸ்ஸாம் மக்களுக்கு எதிரான வதந்திகளில் சிக்க வைக்கும் முயற்சி: பாப்புலர் ஃப்ரண்ட் கடும் கண்டனம்!

22 ஆகஸ்ட், 2012

கொச்சி: தென்னிந்திய மாநிலங்களில் வாழும் அஸ்ஸாம் மக்களுக்கு எதிராக பரப்பப்படும் வதந்தி செய்திகளுக்கான பழியை சுமத்தி பாப்புலர் ஃப்ரண்டை சிக்கவைக்கும் உண்மைக்கு புறம்பான ஊடகங்களின் செய்திகளுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நேற்று சில ஆன்லைன் பத்திரிகைகளும்,  தொலைக்காட்சி சானல்களும் அஸ்ஸாம் மாநிலத்தவருக்கு எதிராக பரப்பப்படும் வதந்தி செய்திகளின் பின்னணியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக நேசனல் சைபர் இன்வெஸ்டிகேஷன் ஏஜன்சி உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை சமர்ப்பித்தது என்று பரப்புரைச் செய்தன. இதனைத் தொடர்ந்து நேற்று கேரளாவில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் மற்றும் கேரள மாநில தலைவர் அஷ்ரஃப் மெளலவி ஆகியோர் கலந்துகொண்டு அவதூறானச் செய்திக்கு மறுப்பையும், கண்டனத்தையும் தெரிவித்தனர்.

இ.எம்.அப்துற்றஹ்மான் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியது: ‘வகுப்புவாத சக்திகள் உள்ளிட்ட விஷமிகள் அஸ்ஸாம் மாநிலத்தவர்களுக்கு எதிரான வதந்தி செய்திகளை பரப்புரைச் செய்வதில் ஈடுபட்டுள்ளனர். அஸ்ஸாமில் உண்மையான மனிதநேய பிரச்சனையில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப வேண்டுமென்றே நடக்கும் முயற்சிதான் தற்போதைய பிரச்சனையின் பின்னணியில் அமைந்துள்ளது.

அஸ்ஸாம் மாநிலத்தவர்களுக்கு எதிராக நடத்தப்படும் போலி மிரட்டல் வதந்திகள் குறித்து ஏற்கனவே பாப்புலர் ஃப்ரண்டின் நிலைப்பாடு குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.இந்திய குடிமக்களுக்கு நாட்டின் எப்பகுதியிலும் கல்வி பயிலவும், பணிபுரியவும் பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும் என்பதே பாப்புலர் ஃப்ரண்டின் நிலைப்பாடு ஆகும்.

தேசிய பொதுச்செயலாளர் கடந்த ஆகஸ்ட் 20-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையே இதற்கு ஆதாரமாகும்.

அந்நிய மாநிலத்து மக்களை பாதுகாக்கவேண்டும் என்ற பாரம்பரியத்தை தென்னிந்திய மக்கள் உறுதியாக கடைப்பிடிக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த வதந்தி பிரச்சாரங்களின் பின்னணியில் கேரளாவை மையமாகக் கொண்டு செயல்படும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவும், பங்களாதேஷைச் சார்ந்த ஒரு அமைப்பும் செயல்பட்டுள்ளதாக குறிப்பிட்டு நேசனல் சைபர் இன்வெஸ்டிகேஷன் ஏஜன்சி உள்துறைக்கு அறிக்கை அளித்துள்ளதாக சில தொலைக்காட்சி சானல்களும், ஆன்லைன் பத்திரிகைகளும் செய்தி வெளியிட்டுள்ளன.

இத்தகையதொரு அறிக்கையை அந்த ஏஜன்சி அளித்துள்ளதா? என்பது தெரியவில்லை. ஆனால், பாப்புலர் ஃப்ரண்டை இப்பிரச்சனையில் தேவையில்லாமல் நேர்மையற்ற முறையில் இழுப்பதற்கு முயற்சி நடக்கிறது. இக்குற்றச்சாட்டை நிரூபிக்க சம்பந்தப்பட்டவர்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் சவால் விடுக்கிறது.

பாப்புலர் ஃப்ரண்ட் மீது தீவிரவாத பழியை சுமத்துவது இது முதல் முறையல்ல. மும்பை தொடர் குண்டுவெடிப்பு, டெல்லி இஸ்ரேல் தூதரக அதிகாரியின் வாகன குண்டுவெடிப்பு ஆகியவற்றிலும் பாப்புலர் ஃப்ரண்டை தொடர்பு படுத்த முயற்சிகள் நடந்தன. ஆனால், இவையெல்லாம் கட்டுக்கதைகள் என்பது பின்னர் நிரூபணமான போதும் இச்செய்திகள் உருவாக்கிய மோசமான சூழல் இப்போதும் நிலவுகிறது.

பாப்புலர் ஃப்ரண்டின் பெயரை கெடுக்கும் வகையில் அவதூறு செய்திகளை வெளியிட்ட 13 பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சி சேனல்கள் மீது கடந்த சில மாதங்களில் ப்ரஸ் கவுன்சிலுக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. சிலவற்றின் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அஸ்ஸாம் மாநிலத்தவர்களுக்கு எதிரான வதந்தி செய்திகளை பரப்பியது தொடர்பாக கர்நாடகா மாநிலத்தில் ஒரு சிலரை கைது செய்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவர்களின் விபரங்களை அதிகாரிகள் வெளியிடவேண்டும்.

பாப்புலர் ஃப்ரண்டின் எந்த உறுப்பினரையும் இவ்விவகாரத்தில் இதுவரை கைது செய்யவில்லை. எஸ்.எம்.எஸ் பிரச்சாரம் தொடர்பாக 250 இணையதளங்களை மத்திய உள்துறை அமைச்சகம் முடக்கியுள்ளதாக செய்தி வெளியானது. ஆனால், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அதிகாரப்பூர்வ இணையதளம் தற்பொழுதும் இயங்கி வருகிறது.

புதுடெல்லியை மையமாக கொண்டுதான் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இயங்கி வருகிறது என்பதை உளவுத் துறையினர் விசாரித்து தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில்லை.பங்களாதேஷுடன் பாப்புலர் ஃப்ரண்டை தொடர்புபடுத்தி திரித்து செய்திகளை வெளியிடும் உளவுத்துறையினர் தாம் டெல்லியில் உள்ளனர். அஸ்ஸாம் மாநிலத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் மொழியையும், மதத்தையும் பார்க்காமல் மத்திய-மாநில அரசுகள் விரைவான நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும். மூன்று லட்சம் அகதிகளை அவர்களின் வீடுகளில் மீண்டும் குடியமர்த்தும் முக்கியமான விவகாரம் இப்பொழுது புறக்கணிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத வங்காளதேச குடியேற்றக்காரர்கள் என்று பிரச்சனையை திசை திருப்பவும் முயற்சி நடக்கிறது.

வகுப்புவாத சிந்தனையுடன் அடிப்படையற்ற வதந்திகளை பரப்புரைச் செய்வதில் இருந்து உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு ஏஜன்சிகளை அரசு கட்டுப்படுத்த வேண்டும்.’ இவ்வாறு இ.எம்.அப்துற்றஹ்மான் தெரிவித்தார்.

0 விமர்சனங்கள்:

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010