புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

பாப்புலர் ஃப்ரண்டின் புதிய மாநில பொதுச்செயலாளர்

24 ஆகஸ்ட், 2011

பத்திரிக்கை செய்தி


பாப்புலர் ஃப்ரண்டின் மாநில செயற்குழு கூட்டம் நேற்றும் (23.08.2011) அன்று மாநிலத் தலைவர் ஏ.எஸ். இஸ்மாயில் அவர்கள் தலைமையில் மதுரையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக‌ தேசிய துணைத்தலைவர் எம். முஹம்மது அலி ஜின்னா அவர்கள் கலந்து கொண்டார். இதில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தீர்மானங்கள்

  1. மாநில பொதுச்செயலாளராக இருந்த நிஜாம் முஹைதீன் அவர்கள் தனது சொந்த வேலைப்பளுவின் காரணமாக பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிப்பு கேட்டு கோரிக்கை வைத்தார். இதனை பரிசீலித்து செயற்குழு அவருக்கு விடுவிப்பு வழங்கியது. இதைத்தொடர்ந்து காலியாக இருந்த மாநில பொதுச்செயலாளர் பதவிக்கு தேசிய துணைத்தலைவர் எம். முஹம்மது அலி ஜின்னா அவர்கள் தேர்தல் நடத்தினார். இந்த தேர்தலில் புதிய மாநில பொதுச்செயலாளராக ஏ. காலித் முஹம்மது (மதுரை) அவர்கள் செயற்குழு உறுப்பினர்களால் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  2. மக்களின் ஆரோக்கியத்தை பேணும் வகையில். வருகின்ற செப்டம்பர் 10 முதல் 25ம் தேதி வரை தமிழகம் முழுவதும் மருத்துவ முகாம்கள், இரத்தப் பிரிவு கண்டறிதல், மற்றும் இரத்ததான முகாம்கள் ஆகியவற்றை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
  3. முஸ்லிம்கள் சார்பாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மேலப்பாளையத்தில் நடத்தவிருந்த சுதந்திர தின அணிவகுப்பை தடை செய்த காவல்துறை மற்றும் தமிழக அரசை செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. அது மட்டுமல்லாது சுதந்திர தினத்தன்றும் அதற்கு முந்தைய தினமும் மேலப்பாளையம், கடையநல்லூர், களக்காடு ஏர்வாடி போன்ற பகுதிகளில் முஸ்லிம்களை பீதிவயப்படுத்தும் விதமாகவும், சுதந்திரத்தை பறிக்கும் வகையிலும் ஊரைச் சுற்றி காவல்படை குவித்து, காவல்தடுப்புகளை ஏற்படுத்தி முஸ்லிம்களை மனரீதியாக அச்சுறுத்தி, பல்வேறு அத்துமீறல்களை நிகழ்த்திய காவல்துறையின் இந்த மனித உரிமை மீறலை இச்செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.
வரும் காலங்களில் இதுபோன்ற சிறுபான்மை விரோதப்போக்கு சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறும் முஸ்லிம்களின் ஜனநாயக உரிமைகளுக்கும், நியாயமான உணர்வுகளுக்கும் மதிப்பளித்து சிறுபான்மை சமூகத்தின் உரிமைகளை பாதுகாக்கும் கேடயமாக விளங்க வேண்டும் என காவல்துறைக்கும், தமிழக அரசுக்கும் இச்செயற்குழு வேண்டுகோள் விடுக்கின்றது. மேலும் சுதந்திர தின அணிவகுப்பை தடை செய்ததை எதிர்த்தும் அதனையொட்டி முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அத்துமீறல்களுக்கு  நியாயம் கேட்டும் நீதிமன்றத்திற்கு செல்வது என தீர்மானிக்கப்பட்டது.

இதற்கு முந்தைய காலங்களில் அதிமுக அரசின் ஆட்சிகாலத்தின் போதும், கடந்த காலங்களில் தமிழக அரசு செப்டம்பர் 15 அண்ணா பிறந்த நாளையொட்டி 7 ஆண்டுகள் கழிந்த ஆயுள் சிறைவாசிகளை பொதுமன்னிப்பில் விடுதலை செய்தது. தற்போது ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதான் அவர்கள் இந்த வருடமும் 7 ஆண்டுகள் கழிந்த முஸ்லிம் சிறைவாசிகள் உட்பட அனைத்து சமூக சிறைவாசிகளையும் பொது மன்னிப்பில் விடுதலை செய்ய வேண்டுமென இச்செயற்குழு வேண்டிக்கொள்கிறது.

12ம் வகுப்பில் 75% மதிப்பெண் பெற்றும் உயர் கல்வி பயில வசதியில்லாமல் இருக்கும் ஏழை மாணவ, மாணவியருக்கு வட்டியில்லா கடன் என்ற அடிப்படையில் ஏழை மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அறிவித்திருந்தது. இதற்காக தமிழகம் முழுவதிலிருந்து பெறப்பட்ட அனைத்து விண்ணப்பங்களும் பாப்புலர் ஃப்ரண்டின் சமூக மேம்பாட்டுத் துறையில் பரிசீலிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. உதவித்தொகை பெற தகுதியான மாணவ, மாணவியருக்கு செப்டம்பர் மாத இறுதிக்குள் இந்த தொகையை விநியோகிப்பது என தீர்மானிக்கப்பட்டது.

புனித ரமலானையொட்டி முஸ்லிம்கள் நோன்பிருந்து வருகின்றனர். அந்த நோன்பில் ஏற்படும் குறைகளுக்கான பரிகாரமாக ரமாலான் மாத இறுதியில் முஸ்லிம்கள் கொடுக்க வேண்டிய கடமையான "சதக்கத்துல் ஃபித்ரு" என்ற ஃபித்ரா தொகையை வசூல் செய்து, அவற்றை முறையாக அந்தந்த பகுதிகளில் ஏழைகளுக்கு விநியோகித்து, அனைத்து முஸ்லிம்களும் நோன்பு பெருநாளை பசியின்றி மகிழ்ச்சியாக கொண்டாட வகை செய்வது என இச்செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டது.

இப்படிக்கு

மக்கள் தொடர்பு அலுவலர்
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
தமிழ்நாடு

0 விமர்சனங்கள்:

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010