இடிந்தகரை: அணு உலை எதிர்ப்பு போராட்டக்குழுவினரை போராட்டத்தை கைவிட நிர்பந்தித்து வரும் தமிழக அரசு அத்தியாவசிய பொருட்கள் இடிந்தகரை கிராமத்திற்குள் செல்வதை தடுத்துள்ளனர். குடிநீர், உணவு, பால், மின்சாரம் போன்றவைகளை காவ்லதுறையினர் தடுத்துள்ளனர். குடி நீர் விநியோகம் நிர்வாகத்தினரையும் பலவந்தப்படுத்தி கடைகளை மூட வைத்துள்ளனர். பெட்ரோல் பங்க் முதற்கொண்டு அனைத்துவிதமான அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் இடிந்தகரை கிராம மக்கள் பெருத்த சிரமத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளனர்.
கர்ப்பிணி பெண் ஒருவரின் பிரசவ நேரம் நெருங்கியதால் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றபோது காவல்துறையினர் அனுமதி மறுத்திவிட்டனர். மிகுந்த மரியாதையுடன் அவர்களிடம் வேண்டியபோதுதான் அவர்கள் அப்பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அனுமதித்தனர் என அவர் மேலும் கூறினார்.
நெல்லை மாவட்ட காவல்துறை எஸ்.பியை தொடர்பு கொண்டு இது பற்றி கேட்டபொழுது நாங்கள் குடி நீர், மற்றும் மின்சாரத்தை தடுக்கவில்லை என திட்டவட்டமாக மறுத்ததோடு அப்பகுதி மக்கள் தான் காவல்துறையினரை ஊருக்குள் அனுமதிக்காமல் சாலைகளை மறித்துள்ளதாக தெரிவித்தார். ஆனால் இடிந்தகரை போராட்டக்காரர்கள் காவல்துறை அதிகாரி கூறியதை முற்றிலுமாக மறுக்கின்றனர். நாங்கள் காவ்லதுறையினரை எங்கள் ஊருக்குள் நுழையவிடாமல் தடுக்கவில்லை, அதேசமயம் எங்களது போராட்டத்தை தடுக்க நினைக்கும் காவல்துறையினரைத்தான் தடுத்து வருகிறோம். காவல்துறையினர் தான் எங்களை ஆதரிக்க வருபவர்களை ஊருக்குள் வரவிடாமல் தடுத்து வருகின்றனர் என போராட்டக்குழு உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். அதுமட்டுமல்லாது இடிந்தகரைக்கு செல்ல மீடியாக்களையும் காவல்துறையினர் அனுமதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்து வருகிறது.
கிட்டத்தட்ட 8000 மக்கள் இடிந்தகரை கிராமத்தில் அணு உலையை எதிர்த்து போராடி வருகின்றனர். ஒட்டுமொத்த கிராமத்தை தமிழக காவல்துறையினர் துணை இராணுவத்தினரின் துணையோடு சுற்றிவழைத்துள்ளனர். போராட்டக்குழுவின் தலைவர் உதயகுமாரின் மனைவி மீரா உதயகுமார் நாகர்கோவிலில் நடத்தி வரும் பள்ளிக்கூடமும் தாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக புகார் கொடுக்கச் சென்றும் காவல்துறையினர் இது தொடர்பாக எந்த முயற்ச்சியும் எடுக்கவில்லை என மீரா உதயகுமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமிழக அரசின் மக்கள் விரோத போக்கும், சர்வதிகாரப்போக்கும் தற்போது இடிந்தகரை கிராம மக்கள் மீது உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. போராட்டக்காரர்கள் எந்த நிலையிலும் கைது செய்யப்படலாம் என தெரிகிறது.
0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக